சுவிட்ச் ஆஃப் ஆன செல்போன்.. பூட்டிக்கிடந்த வீடு.. நடிகை கஸ்தூரி தலைமறைவு
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த நவம்பர் 3ஆம் தேதி அன்று சென்னை எழுப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் “பிராமணர்கள் பாதுகாப்பு மற்றும் பிரமாணர்களை இழிவுப்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுக்க தனிச்சட்டம்” ஆகியவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, “மன்னர்கள் காலத்தில் அந்தப்புர சேவைகள் செய்ய வந்தவர்கள் தெலுங்கு பேசுபவர்கள் என்றும், அவர்கள் எப்படி தமிழர்களான பிராமணர்களை, தமிழர்கள் இல்லை என சொல்ல முடியும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
அதோடு, தெலுங்கர்கள் 5 பேர் தற்போது அமைச்சர்களாக இருப்பதாகவும் நடிகை கஸ்தூரி தெரிவித்திருந்தார். கஸ்தூரியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு அரசியல் கட்சிகள், அமைப்பபினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல்நிலையங்களில் நடிகை கஸ்தூரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்த நடிகை கஸ்தூரி, ‘மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்ற என் பிடிவாதம் சகோதர மனப்பான்மையுடன் அறிவுறுத்தியதால் தளர்ந்தது. மீண்டும் மீண்டும் சொல்கிறேன். தெலுங்கர் என்றோ தெலுங்கு மக்கள் குறித்தோ பேசவேயில்லை இல்லை இல்லை. தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன்’ என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில், கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
கஸ்தூரி மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணைக்குச் சென்றபோது, வீடு பூட்டி இருந்துள்ளது. மேலும், அவரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?