சினிமாவின் தீராக் காதலன் - சிம்புவின் வீழ்ச்சியும், வளர்ச்சியும்
தமிழ் சினிமாவில் வீழ்ச்சிகளுக்கும் பின்னர் எழுந்து நிற்கும் நடிகர்கள் என்பது, குறிப்பிடத்தகுந்த சில நபர்களால் மட்டுமே முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த சில நபர்களில் சிம்புவுக்கு எப்போதும் இடமுண்டு.
தமிழ் சினிமாவுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நடிகர்களின் பட்டியல் பெரிது. அதிலும், பிறந்தது முதலே சினிமாவில் இயங்கிக் கொண்டிருக்கும் நடிகர்கள் என்றால் இருவரை மட்டுமே சொல்லலாம். ஒருவர் கமல்ஹாசன், இன்னொருவர் சிலம்பரசன். 41 வயது நிறைவடையும் நிலையில் உள்ள சிம்பு சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிலபல படங்கள் வெளியாகும் நிலையில், ஒரு நடிகராக 40 ஆண்டுகள் சினிமாவில் நிலைப்பதும், 22 ஆண்டுகளாகத் தொடர்ந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகராகத் தன்னை தக்கவைத்துக் கொள்வதும் அவ்வளவு எளிதில்லை. ஆனால், அதை சாத்தியமாக்கி, சாதித்திருக்கிறார் சிம்பு.
சினிமாவின் தீராக் காதலன்:
அப்பாவின் மூலம் சினிமாவுக்கு வந்ததால் சிம்புவுக்கு வாரிசு நடிகர் என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், வாரிசு நடிகர் என்ற அடையாளத்துடன் அறிமுகமான பல நடிகர்கள் இன்று சினிமாவில் தடம் பதிக்க இயலாமல், திறமையை நிரூபிக்க முடியாமலும், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாததாலும் காணாமல் போயுள்ளனர். ஆனால், சிம்பு வாரிசு நடிகராகக் களமிறங்கினாலும் அவரின் நடிப்பும், உழைப்புமே அவர் அடைந்திருக்கும் உயரத்தின், உச்சி முகர்ந்து கொண்டாடும் ரசிகர் பட்டாளத்தின் அடையாளங்கள்.
இன்று நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு நடிகர் திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகராக ஜொலிக்கலாம். அப்படி வெகுசிலரே இயங்கினாலும் அதிலும் இசையமைப்பாளர், டான்ஸர், மற்ற நடிகர்களுக்குப் பின்னணிக் குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் என்று சினிமாவில் உள்ள எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வது சினிமாவின் மீதுள்ள தீராக் காதலால்தான் சாத்தியமாகும். அப்படி சினிமாவின் தீராக் காதலனாகத் திகழும் சிம்பு கடந்து வந்த பாதை கடினமானது.
தீபாவளியும் சிம்புவும்:
தீபாவளித் திருநாளையும், சிம்புவின் படங்களையும் அவ்வளவு எளிதில் பிரிக்கவோ, மறக்கவோ முடியாது. ஏனென்றால், இரண்டு வயது கூட நிறைவடையாத குழந்தை நட்சத்திரமாக சிலம்பரசன் அறிமுகமான உறவைக் காத்த கிளி திரைப்படம் 1984ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. டி.ராஜேந்தர் இயக்கி, இரட்டை வேடங்களில் நடித்த இப்படத்தின் மூலம்தான் சிலம்பரசனின் வருகை தமிழ் சினிமாவில் நிகழ்ந்தது. குழந்தை நட்சத்திரமாக ஒரு டஜன் படங்களில் நடித்த பிறகே நாயகனாகத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டார் சிம்பு.
அவர் நாயகனாக அறிமுகம் ஆன காதல் அழிவதில்லை படமும் 2002ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. விஜயகாந்த் நடித்த ரமணா, விஜய் நடித்த பகவதி, அஜித் நடித்த வில்லன் படங்களுடன் டி.ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை படமும் வெளியானதன் மூலம், அறிமுகப் படத்திலேயே விஜயகாந்த், விஜய், அஜித் படங்களுடன் போட்டி போட்ட பெருமை சிம்புவுக்கு உண்டு.
அனைத்துத் தரப்பு ரசிகர்களும் யார் இந்த சிலம்பரசன் என்று திரும்பியும் விரும்பியும் பார்க்க வைத்த திரைப்படம் மன்மதன். விடலைப் பையன், விரல் வித்தை நாயகன், அதீத தன்னம்பிக்கையுடன் சீன் போடும் வாரிசு நடிகர் என்ற எல்லா இமேஜையும் அடித்து நொறுக்கினார் சிம்பு. அதுவும் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆறாவது படத்திலேயே இரட்டை வேடங்களில் நுட்பமாக நடித்து அசத்தியது, திரைக்கதை எழுதியது, இயக்குநர் மேற்பார்வையாளராக இருந்தது என சிம்பு காட்டிய முனைப்பை சமகாலத்தில் எந்த நடிகரும் முயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் அட்டகாசத்துடன் 2004ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான மன்மதன் படம் அதிரி புதிரி ஹிட் அடித்து திரையுலகையே வாய் பிளக்க வைத்தது. இந்தப் படம் கொடுத்த நம்பிக்கையில் வல்லவன் படத்தை இயக்கி, நடித்து ஹிட் பட இயக்குநராகவும் மாறினார் சிம்பு.
ஏற்கெனவே நட்பில், அன்பில் திளைத்த நடிகருடன் அல்லது நடிகையுடன் பிரிவுக்குப் பிறகு நடிப்பது சினிமாவில் அபூர்வம். அந்த அபூர்வத்தையும் சிம்பு விட்டுவைக்கவில்லை. இது என்ன மாயம் படத்தில் நயன்தாராவுடனும், மகா படத்தில் ஹன்சிகாவுடனும் சிம்பு நடித்தது அவரது பக்குவத்தையும், முதிர்ச்சியையும் பறைசாற்றியது.
ஆச்சரியப்படுத்திய மாற்றங்கள்:
கமர்ஷியல் படங்களில் திறமை காட்டுகிறேன் என்று பன்ச் பேசி வந்த சிம்பு அமைதியான, பணிவான, பக்கத்து வீட்டுப் பையனைப் போன்ற சுபாவத்தையும் வெளிப்படுத்தியுள்ள கேரக்டர்களில் நடித்து அப்ளாஸை அள்ளியுள்ளார். தொடக்கத்தில் தம், அலை படங்களில் நடித்த சிம்பு, சாமி படத்துக்குப் பிறகு ஹரியின் இயக்கத்தில் கோவில் படத்தில் மென்மையான கேரக்டரில் நடித்தது ஆச்சரியம்.
கேங்ஸ்டர், தாதா, ரௌடி படங்கள் என்றால் தன் புஜபல பராக்கிரமங்களை, நாயக பிம்பத்தை, மாஸ் வசனங்கள் மூலம் ஹீரோ பேசி பில்டப் செய்வதுதான் தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. ஆனால், சிம்பு நடித்த தொட்டி ஜெயா படத்தில் மிக மிகக் குறைவாக வசனங்களைப் பேசியிருப்பார். ஒரு ஹீரோ தாதாவாக நடிக்கும்போது அவ்வளவு குறைவான வசனங்களைப் பேசி எந்தப் படத்திலும் பார்த்திருக்க முடியாது. நடிப்பு என்பது வசனங்களால் காட்சியை நிரப்புவதல்ல, காட்சிகளால் திரையை நிரப்புவது என்பதை மெய்ப்பித்துக் காட்டினார் சிம்பு.
விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் அவர் திரைவாழ்வில் மறக்க முடியாத வரவேற்பை, வெற்றியை, கௌரவத்தைக் கொடுத்தது. தமிழ் சினிமாவில் காதல் கல்ட் கிளாசிக் அந்தஸ்து பெற்ற படத்தில் நடித்த சிம்பு, 90ஸ் கிட்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர விடிவி திரைப்படமே காரணமாக அமைந்தது. இப்போதும் கார்த்திக் - ஜெஸ்ஸியை நினைவூட்டும் காதல் திரைப்படங்களே அதற்கான சாட்சி.
வானம் திரைப்படத்தில் குற்ற உணர்ச்சி கொண்ட கேபிள் ராஜா கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து நடிப்பில் மெய்மறக்கச் செய்தார். எதையும் அறிந்துகொள்ளச் செய்யாமல், பார்வையாளர்களை உணரச் செய்வதே நல்ல நடிப்புக்கான இலக்கணம் என்பதை சிம்பு இதில் வெளிப்படுத்தினார்.
தோல்விகளும் சறுக்கல்களும்:
ஒஸ்தி படத்தின் தோல்விக்குப் பிறகு சிம்பு தொடர்ந்து நடித்து வந்தாலும் நிறைய சறுக்கல்களைச் சந்தித்தார். வருடத்துக்கு ஒரு படத்தில் நடித்து வந்தாலும், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படமும் பெரிய தோல்வியைத் தழுவியது. சிம்பு குண்டாக இருப்பதாகவும், உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றும் கேலிக்குள்ளானார்.
ஆனால், மாநாடு படத்தின் மூலம் கம் பேக் கொடுத்து அனைவரையும் வாயடைக்கச் செய்து பதிலடி கொடுத்தார். திரைக்கதையின் பலத்துக்கேற்ப நடிப்பால், உடல் மொழியால் சிம்பு வேற லெவலில் தன்னை நிரூபித்தார். இப்போது கமலுடன் நடிக்கும் தக் லைஃப், இரட்டை வேடங்களில் நடிக்கும் 48-வது படம், அஷ்வத் மாரிமுத்து இயக்கும் 49-வது படம் என வரிசை கட்டி நிற்கின்றன.
பாடகராக ரீச் ஆன சிம்பு:
குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே சம்சார சங்கீதம் படத்தில் ஐ யம் ய லிட்டில் ஸ்டார் பாடலைப் பாடி கவனம் ஈர்த்த சிம்பு, மோனிஷா என் மோனலிசா படத்தில் தமிழ் மற்றும் இந்தியில் பாடி அசத்தினார். நாயகனாக நடிக்கும் முன்பே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காதல் வைரஸ் படத்தில் பைலா மோர் பாடல் மூலம் பிரபலம் ஆனார். தன் படங்களில் தனக்காகப் பாடிய சிம்பு தேவா, கார்த்திக் ராஜா, யுவன், இமான், ஜி.வி.பிரகாஷ், தமன், அனிருத் இசையில் 100க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள நிலையில், பிற நாயகர்களின் படங்களிலும் பாடி வருகிறார்.
லூசுப் பெண்ணே, வேர் இஸ் தி பார்ட்டி, எவன்டி உன்னைப் பெத்தான், பொண்டாட்டி, லவ் பண்லாமா வேணாமா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாடல்கள் மூலம் ட்ரெண்டிங் பாடலாசிரியராக ரீச் ஆன சிம்பு, தனி ஆல்பங்களைத் தாண்டி சந்தானத்தின் சக்கபோடு போடு ராஜா, ஓவியாவின் 90 எம்.எல். படங்களின் இசையமைப்பாளராகவும் திறமை காட்டியுள்ளார்.
விமர்சனங்களைத் தாண்டி வியக்க வைக்கும் கலைஞன்:
திரைக்கு உள்ளேயேயும், வெளியேயும் சிம்பு சந்திக்காத விமர்சனங்கள் இல்லை. ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவது, ஒத்துழைப்பு இல்லை எனப் பல குற்றச்சாட்டுகள். ஆனால், அவரது திறமையை யாரும் குறைத்து மதிப்பிட்டதில்லை. திறமைசாலி இல்லை என்று மறுக்கவும் இல்லை. அந்த அளவுக்கு வெறுப்பாளர்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவராக சிம்பு இருப்பது நிதர்சனம். அதனால்தான் தோல்விப் படங்களே இருந்தாலும், ரசிகர்கள் சிம்புவைக் கொண்டாடத் தவறுவதில்லை.
ரசிகர்களின் அன்பும், அக்கறையும், நம்பிக்கையும்தான் எத்தகைய வீழ்ச்சியைச் சந்தித்தாலும் சிம்பு பீனிக்ஸ் பறவை போல, தோல்வியை உதறிக்கொண்டு மேலே எழுந்து உயரப் பறக்க முடிகிறது. இனி சிம்பு அவ்வளவுதான், அவரால் மீண்டு எழ முடியாது, சிம்பு இடத்துக்கு இன்னொரு நடிகர் வந்துவிட்டார் என்ற ஆருடங்களையெல்லாம் பொய்யாக்கி தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார். அதனாலேயே இதோ 40 ஆண்டு திரைப் பயணமும், 50-வது படமும் சாத்தியமாகியுள்ளது. தன் ரசிகர் கூட்டத்தைத் தாண்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்விக்கும் சிறந்த கலைஞராக சிம்பு தொடர வாழ்த்துகிறோம்.
-சி.காவேரி மாணிக்கம்
What's Your Reaction?