"ஆணவக்கொலை பண்ணிருவாங்க.." கதறிய காதல் ஜோடி

மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞருக்கு வில்லனாக மாறியுள்ளது அவரது குடும்பம்... குடும்பத்தினர் அளித்த தொந்தரவுகளை தாங்க முடியாத கணவர், அவரது மனைவியை குழந்தை போல தூக்கி வந்து ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர்மல்க புகாரளித்துள்ளார். என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

Oct 1, 2024 - 21:55
 0

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி கிராமத்தை சேர்ந்த சிவசுப்ரமணியன், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துஅருளி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணை கல்லூரி படிக்கும்போதில் இருந்து 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.  இருவரும் வேறுவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் சம்மதம் தெரிவிக்காத நிலையில், காதல் ஜோடி தாங்களாகவே 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 

தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியில் இருவரும் தனியாக வசித்துவந்த நிலையில், அவ்வப்போது வீட்டுக்கு வரும் சிவசுப்ரமணியனின் குடும்பத்தினர், முத்துஅருளி வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை பெற்று தரக்கோரி தொடர் தொந்தரவுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். 

இதனால் கடுப்பான சிவசுப்ரமணியன், பணம் எல்லாம் வாங்க முடியாது என தனது குடும்பத்தினரை எச்சரித்து அனுப்பியிருக்கிறார். ஆனால் தொடர் மூளைச்சலவையில் இறங்கிய குடும்பத்தினர் அப்பெண் வேறு சமூகம், மாற்றுத்திறனாளி கூட, இது தங்களுக்கு கௌரவ குறைச்சலாக இருப்பதாக கூறி சிவசுப்ரமணியை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்திருக்கின்றனர். ஆனால் சிவசுப்ரமணியன் ஒருபடி மேலே போய் மனைவியுடன் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். 

எறிகிற நெருப்பில் இது எண்ணெய்யாய் ஊற்ற, விபரீத முடிவுக்கு சென்ற சிவசுப்ரமணியனின் தாய் , பிறந்த குழந்தையின் வாயில் நெல்லை போட்டு கொல்ல முயன்றதாக தெரிகிறது. தொடர் மிரட்டல், தொடர் தொந்தரவு என சோர்ந்து போன காதல் ஜோடி, ஊரே வேண்டாம் என மதுரைக்கு குடிபெயர்ந்தது. ஆனால் விடாத கௌரவ குறைச்சல் மேலும் துரத்தியது. மதுரையில் சிவசுப்ரமணியனை ஆள் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோனவர்கள் தங்கள் குழந்தையை கொன்றுவிடுவார்கள் என நண்பர் வீட்டில் வைத்து யாருக்கும் தெரியாமல் வளர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

கணவர் வேலைக்கு செல்லும் நிலையில், தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற நோக்கில் முத்துஅருளி யூடியூப் சேனலை தொடங்கி அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதையும் பொறுத்துக்கொள்ள முடியாத சிவசுப்ரமணியன் குடும்பம், அதனை ஹேக் செய்து வாழ்வாதரத்தை காலி செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். 

மிரட்டல், தாக்குதல், பயமுறுத்தல் என ஓடிக்கொண்டே இருக்கும் தம்பதி, தற்போது நிர்கதியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அங்கே மனைவியை கணவர் குழந்தை போல தூக்கி வந்த நிலையில், தங்களை கொன்றுவிடுவார்கள் என பயமாக இருப்பதாகக்கூறி கண்ணீர்மல்க கோரிக்கை மனு அளிக்க வந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலையே ஏற்பட்டது. முன்னதாக நெல்லையிலும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் தம்பதி புகாரளித்துள்ள நிலையில், சட்டமும் போலீசும் தங்களை காப்பாற்றாதா என்ற ஏக்கத்துடன் தம்பதி திரும்பிச்சென்றிருக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow