இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் புயல்.... வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை ஒட்டி இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Aug 31, 2024 - 13:02
Aug 31, 2024 - 15:50
 0
இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் புயல்.... வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் செப்டம்பர் 5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூருக்கு இடையே கலிங்கப்பட்டணம் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. இருப்பினும் சென்னையில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயிலும் இரவில் சூடான சூழ்நிலையும் நிலவி வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (ஆகஸ்ட் 30) இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர் புதுப்பேட்டை, கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் கோயம்பேடு, வளசரவாக்கம், உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். சில இடங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. இதனால் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றவர்கள் சிரமம் அடைந்தனர. இதேபோல் சென்னை புறநகரின் பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்துக் கட்டியது. 

சென்னை புறநகர் பகுதிகளான குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி, மலையம்பாக்கம், காட்டுப்பாக்கம், ஐயப்பாந்தாங்கல்,செம்பரம்பாக்கம், திருவேற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதேபோல் புறநகர் மாவட்டமான திருவள்ளூர் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர், கடம்பத்தூர், திருப்பாச்சூர், மணவாளநகர், அரண்வாயல், ஜமீன்கொரட்டூர், திருமழிசை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

மேலும் படிக்க: தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த இஸ்ரேல்..... காசா மக்கள் பெருமூச்சு!

சென்னையை போல் திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow