National Award: கோலாகலமாக நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழா... பொன்னியின் செல்வன் டீம் ஆஜர்!
70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தற்போது டெல்லியில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
டெல்லி: 70-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டன. 2022-ம் ஆண்டுக்கான இந்த விருதுகளில், தமிழில் சிறந்தப் படமாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் தேர்வானது. அதேபோல் ‘பொன்னியின் செல்வன் 1’ படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக ஏஆர் ரஹ்மான் தேசிய விருதுக்கு தேர்வானார். மேலும், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிப்பதிவு என 4 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றது பொன்னியின் செல்வன் பார்ட் 1. பொன்னியின் செல்வனை அடுத்து தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகையாக நித்யா மேனனும், சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது ஜானி மாஸ்டர், சதீஷ் இருவருக்கும் பகிர்ந்தளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஜானி மாஸ்டர் போக்சோ வழக்கில் சிக்கியதால், அவருக்கான தேசிய விருதை ரத்து செய்தது மத்திய அரசு. இந்நிலையில், தேசிய திரைப்பட விருதுகள் தற்போது வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசிய விருதுகளை வென்றனர். இதில் பொன்னியின் செல்வன் இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழில் சிறந்த படத்துக்கான தேசிய விருதை பொன்னியின் செல்வன் படத்துக்காக சுபாஷ்கரன் பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் தேசிய விருது பெற்றார், அப்போது நடிகை குஷ்பூ எழுந்து நின்று கை தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அந்த வரிசையில் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ஏஆர் ரஹ்மானும் பெற்றுக்கொண்டார். இது அவரது 7வது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 'பொன்னியின் செல்வன் 1' படத்தின் சிறந்த ஒலி வடிவமைப்புக்காக, ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, சிறந்த ஒளிப்பதிவுக்காக ரவிவர்மன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மேலும், சிறந்த நடிகைக்காக திருச்சிற்றம்பலம் படத்தின் நாயகி நித்யா மேனன் தேசிய விருது பெற்றார். இதேபோல் இந்தி நடிகை மானசி பரேக்யும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார். முக்கியமாக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை, 'திருச்சிற்றம்பலம்' படத்துக்காக சதீஷ் மட்டும் பெற்றுக்கொண்டார்.
இவர்களுடன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, காந்தாரா படத்துக்காக ரிஷப் ஷெட்டி பெற்றுக்கொண்டார். இந்திய அளவில் சிறந்த திரைப்படமாக கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான 'ஆட்டம்' தேசிய விருதை வென்றது. கன்னடத்தில் சிறந்த திரைப்படமாக 'கேஜிஎப் சாப்டர் 1', சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக கன்னடத்தில் வெளியான 'காந்தாரா' ஆகியவையும் தேசிய விருதுகளை வென்றன. மலையாளத்தில் சிறந்த படத்திற்கான தேசிய 'சவுதி வெலக்கா', தெலுங்கு படத்துக்கான தேசிய விருது 'கார்த்திகேயா 2' ஆகியவைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியாக பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
What's Your Reaction?