ஆம்ஸ்ட்ராங் கொலை: விசிக பிரமுகரிடம் விசாரணை.. மேலும் 3 பேர் கைதால் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன், ஆகிய 3 பேரை கைது செய்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை (Armstrong Murder) தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை, இறுதியாக ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி என மொத்தம் 24 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 11 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். ஆற்காடு சுரேஷ் கொலைப் பின்ணணியில் உள்ள விவரங்களை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் பாம் சரவணன், சம்போ செந்தில் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் கிருஷ்ணன் என்ற மொட்டை கிருஷ்ணன் வெளி நாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடிய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் அடிக்கடி போனில் பேசியதாக, பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
மேலும் படிக்க: ‘அப்படி எதுவும் நடக்கவில்லை’ - ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து நெல்சனின் மனைவி மறுப்பு
இந்நிலையில், மேலும் 3 பேரை செம்பியம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதூர் அப்பு என்பவரின் கூட்டாளி ராஜேஷ் என்பவர் சம்போ செந்தில், மற்றும் கிருஷ்ணன் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததும் கோபி, குமரன் ஆகிய இருவரும் நாட்டு வெடிகுண்டுகள் கொண்டு வந்து ராஜேஷிடம் கொடுத்து, ராஜேஷ் மூலமாக ஹரிஹரனிடம் நாட்டு வெடிகுண்டு கொடுக்கப்பட்டுள்ளது.
ராஜேஷ் மீது இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, கைதான ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் பன்னீர்செல்வம் என்பவரிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாக தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பி இன்று காலை முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் நாகேந்திரன் மற்றும் அஸ்வத்தாமனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரன் மற்றும் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 27 பேர் கைதாகியுள்ள நிலையில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
What's Your Reaction?