தவெகவுடன் அதிமுக கூட்டணி என யார் சொன்னது? பொன்னையன் கேள்வி
கோடீஸ்வரர்களுக்கான கட்சி பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழக முன்னாள் முதலமைச்சரும், எம்ஜிஆர் மனைவியாருமான ஜானகியின் நூற்றாண்டு விழா கொண்டாட்ட பொதுக்கூட்டம் வருகிற நவம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பொன்னையன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி .உதயகுமார், விஜயபாஸ்கர், பெஞ்சமின், ரமணா, மூர்த்தி மற்றும் வைகைச் செல்வன் ஆகியோர் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
அவர்களுடன் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் வருகை தந்தனர். ஆய்வின்போது சக முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கிய பொன்னையன், எம்ஜிஆரின் கையை ஜானகி அம்மாள் பிடித்திருக்கும் புகைப்படத்தை முகப்பில் வையுங்கள் எனவும், இருவரும்தான் இரட்டை இலையை மீட்டனர் எனவும் குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜானகி அம்மாள் நூற்றாண்டு விழா வரும் 24ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. சிறப்பாக நடைபெற உள்ள இந்த விழாவில் அலங்காரப் பணிகள் மற்றும் விருந்தினர்களை எப்படி கவனிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன. பொதுக் கூட்டத்தை விட அதிக அளவு கூட்டம் இந்த நிகழ்ச்சிக்கு கூடும். விஜய்யின் தவெக கட்சிக்கும் எங்களுக்கும் கூட்டணி என யார் சொன்னது?
சமூக வலைதளங்களில் பல தவறான செய்திகளும் யூகங்களும் பரவுகின்றன. அதற்கெல்லாம் பிரதான கட்சியான அதிமுக பதில் கூற முடியாது. கூட்டம் என்பது வேறு தேர்தல் என்பது வேறு. அதற்கெல்லாம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருப்பதால் இப்போதைக்கு அது குறித்து பதில் அளிப்பது முடியாது.
அதே சமயம் தேர்தல் நேரத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறுவார். அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் உலகக் கோடீஸ்வரர்களுக்கும் சொந்தமான பாஜக சொல்லும் அரசியலையும் கருத்துக்களையும் மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள்" என்று தெரிவித்தார்.
What's Your Reaction?