திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் பகுதியில் விபத்து நிகழ்ந்தது. மைசூரில் இருந்து தர்பங்கா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மீது மோதியது. இதில், 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் நிலையம் அருகிலேயே விபத்து நிகழ்ந்துள்ளதால், உடனடியாக மீட்புப்பணி நடந்துக் கொண்டிருக்கிறது.
சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 19 பயணிகள் காயமடைந்தனர். இதில், சுமார் 1 கிலோமீட்டர் அளவுக்கு தண்டவாளம் சேதமடைந்து இருக்கிறது. சிதலமடைந்த தண்டவாளப் பகுதியில் புதியதாக தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ரயில் பாதையில் 51 B பகுதியில் இன்டெர்லாக் செயல்பாடு குறித்து ரயில்வே அதிகாரிகள் காலை ஆய்வு செய்த பகுதியில் தற்போது என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
என்ஐஏ அதிகாரிகளை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஈஸ்வரராவ், ரயில்வே பாதுகாப்பு படை டிஐஜி இப்ராஹிம் உட்பட அதிகாரிகள் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே துறை விசாரணைக் குழு அமைத்துள்ளது. மேலும் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே காவல்துறையும், ரயில்வே துறையும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது. மனித தவறா? தொழில் நுட்ப கோளாறா? என்ற கோணங்களில் விசாரணை முடக்கி விடப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில் லூப் லைனிற்குள் செல்ல யார் காரணம் என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயிருக்கு பச்சை நிற சிக்னல் கொடுக்கப்பட்டிருந்தது. லூப் லைனில் ரயில் செல்லும் போது தடுமாற்றம் ஏற்பட்டதால் ரயில் ஓட்டுனர் (லோகோ பைலட்) வேகத்தை குறைத்ததாலேயே உயிரிழப்பு நிகழவில்லை என்றும், பெரிய சேதம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபுவின் கவனக் குறைவே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது தொடர்பான ஆய்வில் ரயில்வே வல்லுநர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரயில் விபத்து குறித்து 13 பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு, லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட், மோட்டர் மேன், கவரப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி (Section control), 2 கவரப்பேட்டை சிக்னல் ஆபரேட்டர்கள் உள்பட 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் வழங்கி சென்னை கோட்ட மேலாளர் கொடுத்துள்ளார்.
இன்று மாலை தெற்கு ரயில்வே அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு. விசாரணைக்கு பிறகு குற்றம் நிருபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடூக்கப்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.