அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. உதயநிதி தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருப்பதால், அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Aug 26, 2024 - 21:56
 0
அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. உதயநிதி தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
Udayanidhi Stalin

சென்னை: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது போல், சட்டப்பேரவை தேர்தலிலும் இமாலய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக தீவிரமாக உள்ளது.

இதனால் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக இப்போதே தயாராகி வருகிறது. அதாவது சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள செய்ய வேண்டிய மாறுதல்கள் குறித்து தலைமைக்கு பரிந்துரை செய்ய ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்தக் குழுவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஒருங்கிணைப்பு குழு திமுகவை சார்ந்த சார்பு அணிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திமுகவில் உள்ள ஆதி திராவிடர் நலக் குழு, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி ஆகிய அணிகளுடன் ஒருங்கிணைப்பு குழு  இன்று ஆலோசனை நடத்தியது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

அப்போது ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர்,  சட்டப்பேரவை தேர்தலை எப்படி எதிர்கொள்வது? எந்தெந்த மாற்றங்கள் செய்யலாம்? மக்களிடம் பிரசாரத்தை எப்படி முன்னெடுத்து செல்ல வேண்டும்? என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை ஆதி திராவிடர் நலக் குழு, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி உறுப்பினர்களிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கண்ட அணி உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒருங்கிணைப்பு குழு எடுத்துரைக்க உள்ளது. தமிழ்நாட்டுக்கு சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை அமெரிக்கா பயணம் மேற்கோள்ள நிலையில், ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருப்பதால், அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகின. அதாவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் எனவும் 3 சீனியர் அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு  3 புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தீயாக பரவின. 

ஆனால் நாளை முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. முதல்வர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow