சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் தேமுதிக கட்சியின் விஜய பிரபாகரன். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் என்பதால், விஜய பிரபாகரன் எளிதாக வெற்றிப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதே தொகுதியில் பாஜக சார்பில் ராதிகாவும், திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும் போட்டியிட்டனர். வாக்க எண்ணிக்கை தொடங்கியது முதலே விஜய பிரபாகரன் முன்னணியில் வந்தபடி இருந்தார். மாணிக்கம் தாகூர், விஜய பிரபாகரன் இடையே கடும் போட்டி காணப்பட்டது.
ஆனால், கடைசி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருவருக்கும் இடையே 4,379 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றிப் பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என, விஜய பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விருதுநகர் தொகுதியில் மட்டும் தபால் வாக்குகள் இறுதியாக தான் எண்ணப்பட்டன. உணவு இடைவேளைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நேரமும் அதிகம் எனக் கூறியுள்ளார். மேலும், உணவு இடைவேளைக்கு முன் 13வது சுற்று முடிந்திருந்தது. ஆனால் இடைவேளைக்கு பின் 18வது சுற்றுகள் எண்ணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நடைபெற்று முடிந்த இந்த நாடாளுமன்ற தேர்தலில் துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் வீழ்த்தப்பட்டுள்ளேன். அந்த அநியாயத்தை தட்டிக் கேட்கவே நீதிமன்றத்தை நாடி வந்துள்ளேன், நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என பேசியுள்ளார். அதேபோல், விஜய் அரசியலுக்கு வருவது குறித்தும், அவரது தமிழக வெற்றிக் கழகத்துடன் தேமுதிமுக கூட்டணி வைக்குமா எனவும் அவர் கூறியுள்ளார். அதன்படி, தேமுதிக இன்னும் அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் போது நான் போட்டியிடுவது உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவிப்பார். எனது வாழ்க்கையே இந்த கட்சிக்காக மக்களுக்காக அர்பணித்துள்ளேன். தேமுதிகவின் அனைத்து போராட்டங்களிலும் நான் பங்கேற்பேன் எனக் கூறினார்.
விஜய பிரபாகரனைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி கொடுத்தார். அதில், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நவாஸ்கனியின் வெற்றிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் இணைய வேண்டும் என கட்சியின் தொண்டர்கள் சொல்லி வருகின்றனர். நாங்களும் அதைதான் சொல்லி வருகின்றோம். ஒரு ஜனநாயக முறைப்படி தொண்டர்களுக்கான இயக்கமாக தொண்டர்கள் உருவாக்கிய இயக்கமாக அதிமுக உள்ளது. அப்படியான இந்த இயக்கம் பிரிந்து இருப்பது தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகளுக்கு எதிரானது. எங்களை இணைத்து கொள்ளும்படி எடப்பாடி பழனிசாமியிடம் யார் சொன்னது. அவராகவே கேள்விக் கேட்டுக்கொண்டு அவராகவே பதில் சொல்வது நல்லதல்ல. இந்த இயக்கத்தின் முடிவு இன்னும் சில காலத்தில் தெரியும் என்றார்.
அதேபோல், அனைத்து மட்டத் தொண்டர்கள், தலைவர்களிடம் பேசிக்கொண்டு தான் உள்ளேன். சசிகலா வின் பயணம்.வெற்றியடைய வாழ்த்துகள். உச்ச நீதிமன்றம் வரை சென்று காவிரி உரிமையை சட்டமாக்கி கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அதனை நடைமுறைப்படுத்த கூடிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணியில் திமுக உள்ளது. இக்கூட்டணியில் பலம் வாய்ந்த சக்தியாக முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார் என அந்த கூட்டணியின் அனைத்து தலைவர்களும் சொல்கின்றனர். எனவே தனது செல்வாக்கை பயன்படுத்தி தமிழ்நாட்டிற்கு மாதாந்திர அடிப்படையில் தமிழகத்திற்கு கிடைவேண்டிய நீரை பெற்று தரவேண்டிய கடமை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உள்ளது எனவும் ஓ பன்னீர்செல்வம் அவர் தெரிவித்துள்ளார்.