TVK Vijay: விஜய் மக்கள் இயக்கம் To தமிழக வெற்றிக் கழகம்... தளபதியின் தவெக உருவான வரலாறு!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக் கழகமாக உருவெடுத்தது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
சென்னை: ஆரம்பமே அதிரடி தான் என்பது போல, விஜய் அப்போதே அரசியலுக்கு நாள் குறித்துவிட்டாரோ என்னவோ?. 1984ம் ஆண்டு வெளியான ‘வெற்றி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் ஹீரோவாக என்டிரியானார். வெற்றி – நாளைய தீர்ப்பு என, தனது அரசியல் பயணத்தை இங்கிருந்து தொடங்கிவிட்டார் விஜய். சுமார் 32 ஆண்டுகால விஜய்யின் திரைப் பயணம், இப்போது தமிழக வெற்றிக் கழகம் வழியாக முடிவுக்கு வருகிறது. இது மிகப்பெரிய அரசியல் அத்தியாயத்தின் தொடக்கமா... இல்லையா? என்பதை காலமும் தமிழக மக்களும் தான் முடிவு செய்ய வேண்டும்.
விஜய் சினிமாவில் அறிமுகமானது ஈஸியாக இருந்தாலும், முதல் வெற்றிக்கே பல ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி என ரோமியோவாக வலம் வந்துகொண்டிருந்த விஜய், திருமலை படத்திற்குப் பின்னரே ரசிகர்களின் தளபதியாக தடம்பதிக்கத் தொடங்கினார். கில்லி, சிவகாசி, போக்கிரி, வேட்டைக்காரன் என ஆக்ஷனில் மாஸ் காட்டிய விஜய்க்கு, நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
விஜய்யின் இந்த அவதாரம் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் கொண்டுவந்து நிறுத்தியது. ஆனால், அவரோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், அரசியலை நோக்கி சிந்திக்கத் தொடங்கினார். இதன் தொடக்கமாக 2009ம் ஆண்டு உதயமானது தான் ‘விஜய் மக்கள் இயக்கம்’ தனிக்கொடி, தன்னெழுச்சியான கூட்டம் என 2009ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி புதுக்கோட்டையில், விஜய் மக்கள் இயக்கக் கொடியை ஏற்றி வைத்தார் தளபதியின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். ராகவா லாரன்ஸ், சத்யராஜ், தயாரிப்பாளர்கள் ஆர்பி செளத்ரி, ஏஎம் ரத்னம், கலைப்புலி எஸ் தாணு என பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
“எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே... வாடா வாடா தோழா” என விஜய்யின் கூஸ்பம்ஸ் மொமண்ட் பாடல்களுடன், ‘விஜய் மக்கள் இயக்கம்’ கொடி பட்டொளி வீசி பறக்கத் தொடங்கியது. விஜய் எப்போதும் போல தன்னடக்கத்துடன் மேடையில் அமர, அவரின் தளபதி புஸ்ஸி ஆனந்த் கட்டுங்கடங்கா காவிரி நீர் போல கரைபுரண்டு ஓடினார். விஜய் ரசிகர்களோ “இனிமேல் தமிழகத்தின் எதிர்காலமே எங்கள் தளபதி தான்” முழக்கமிடத் தொடங்கினர். ஆனாலும் அடக்கி வாசித்த தளபதி விஜய், 2011 தேர்தலில் முதன்முறையாக அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார். 1996 தேர்தலில் திமுக கூட்டணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி ஆதரவு கொடுத்தது போல, விஜய்யும் தனது அரசியல் பயணத்துக்கு ரெடியானது இங்கிருந்து தான்.
ஆனாலும், தலைவா படத்தின் ரிலீஸின் போது ஜெயலலிதா காட்டிய அதிரடி, தளபதி விஜய்யை தண்ணீர் குடிக்க வைத்தது. இதனால் அரசியலை நோக்கி மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கத் தொடங்கிய விஜய், 2021 உள்ளாட்சித் தேர்தலில் தனது மக்கள் இயக்க தோழர்களை களமிறக்கினார். 170 இடங்களில் போட்டியிட்டு 115-ல் வெற்றிப் பெற, அதன் நீட்சியாக 2024 பிப்.2ம் தேதி உதயமானது தமிழக வெற்றிக் கழகம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த விஜய், 2026 சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு என முடிவு செய்துவிட்டார்.
ஆரம்பத்தில் வெறும் அறிக்கைகள் மட்டுமே கொடுத்துவந்த விஜய், தேசிய குடியுரிமை சட்டம், நீட் தேர்வு ஆகியவற்றிற்கு எதிராக மெல்ல மெல்ல குரல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆக.22ம் தேதி, சென்னை பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார். விஜய் மக்கள் இயக்கம் கொடி எஸ்.ஏ.சியின் கைகளால் பறக்கவிடப்பட்டது. ஆனால் இந்த முறை தமிழக வெற்றிக் கழக கொடியை தளபதி விஜய்யே அறிமுகம் செய்ய, பனையூரே பாகுபலி பட போர்க்களம் போல அதிர்ந்தது. 2009 முதல் இப்போதும் அதே உணர்ச்சிப் பெருக்கில் உருகி நின்றார், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
இதோ இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடும் நடைபெறவுள்ளது. கட்சியின் கொள்கை முதல் தவெக கொடியில் இருக்கும் வாகை மலர், போர் யானைகள் வரை விளக்கம் கொடுக்கவுள்ளார் தளபதி விஜய். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற விஜய்யின் தாரக மந்திரம், தவெக தோழர்களையும் கடந்து மக்கள் மன்றத்தில் எடுபடுமா இல்லையா என்பதை 2026 தேர்தல் தான் முடிவு செய்யும்.
What's Your Reaction?