TVK Maanadu: “இருமொழிக் கொள்கை... ஆளுநர் பதவி வேண்டாம்..” தவெக செயல்திட்டம், கொள்கை இதுதான்!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் அக்கட்சியின் செயல்திட்டங்களும் கொள்கைகளும் வெளியிடப்பட்டன. அதில் தவெக இருமொழிக் கொள்கையை பின்பற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் கோலாகலமாக நடைபெற்றது. மாலை 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், 4 மணிக்கு தலைவர் விஜய் என்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் மாநாட்டு மேடையில் நேர் எதிராக அமைக்கப்பட்டிருந்த நடை மேடையில், தொண்டர்கள் மத்தியில் நடந்து அவர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது தொண்டர்கள் வீசிய தவெக கட்சித் துண்டுகளை கேட்ச் பிடித்த விஜய், அவைகளை தனது தோளில் போட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ரிமோட் மூலம் ஏற்றி வைத்தார்.
மாநாட்டில் தொடர்ந்து கட்சியின் கொள்கைகளும் செயல்திட்டங்களும் வாசிக்கப்பட்டன. தவெக நிர்வாகிகள் சம்பத், கேத்ரின் பாண்டியன் ஆகியோர் வாசித்தனர். ஒரு நாட்டின் மக்களை அவர்கள் சார்ந்த இனம், மதம், மொழி, சாதி, பாலினம் என்று பிரித்துப் பார்க்காமல், அவர்களுக்கு சம உரிமைகளை உத்தரவாதப்படுத்தி சாத்தியமாக்க வேண்டும். ஆட்சி, அதிகாரம், சட்டம், நீதி, அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தி, வெகுஜன மக்களின் அடிப்படை சுதந்திரத்தை மாநில, ஒன்றிய ஆட்சியாளர்கள் பறித்து வருகின்றனர். மக்கள் நலன்களில், செயல்பாடுகளில் எதிர்த்து மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவது தவெகவின் செயல்திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சமதர்ம சமூக நீதி இட ஒதுக்கீடு அல்ல... விகிதாச்சார இட பங்கீடு உண்மையான சமூகநீதிக்கு வழிவக்குக்கும் எனவும் கொள்கை பிரகடனம் செய்யப்பட்டது. முக்கியமாக தவெக இருமொழிக் கொள்கையை பின்பற்றுகிறது என்றும், தமிழ் மொழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்மொழியான தமிழ், உலக இணைப்பு மொழி ஆங்கிலம், தமிழே ஆட்சி மொழி, தமிழே வழக்காடு மொழி, தமிழே வழிபாட்டு மொழி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மதத்தவரையும், மத நம்பிக்கை அற்றவரையும் சமமாக பாவிக்கும் அரசு, ஆட்சி நிர்வாகம் தான் நம்முடைய மதச்சார்பின்மை. உயர்நீதிமன்ற கிளையை போல மதுரையில் தலைமைச் செயலக கிளை அமைக்கப்படும். மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை ஒழிக்க தனிச் சட்டம் கொண்டுவரப்படும் எனவும், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டு நெறிமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசுத்துறை, தனியார் துறை என எந்த துறையிலும் அரசியல் தலையீடு, லஞ்சம், ஊழலற்ற நிர்வாகம். உற்பத்தித் திறன், உடல் நலம், உள்ள நலம் கெடுக்கும் சமூக சீர்கேடுக்கு வழிவகுக்கும் போதை அறவே இல்லாத தமிழகம் படைத்தல் தவெகவின் அடிப்படை கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தப்படும், புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மருத்துவமனைகள். விவசாயிகளின் விற்பனை விலை, நுகர்வோர் வாங்கும் விலை இவற்றிற்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க அறிவியல் பூர்வமான முறை நடைமுறைப்படுத்தப்படும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும், ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள் விவசாய நிலங்கள் மீட்டெடுக்கப்படும். அதிக கொள்ளளவு கொண்ட புதிய ஏரிகள், நீர்த் தேக்கங்கள் தமிழ்நாடு முழுவதும் உருவாக்கப்படும். தமிழர்களின் மரபு தொழிலான பனைத் தொழில் மேம்படுத்தப்படும், பள்ளி மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் ஆடைகள் நெசவாளர்களிடமிருநது நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.
தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர் கொள்ளை, கனிம வனங்கள் கொள்ளை போன்றவற்றை தடுக்க சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும். நகரங்களில் மக்கள் தொகையை குறைக்கவும், பகுதிகள் வளர்ச்சி அடையவும் மண்டல வாரியான பகுதி சார் வளர்ச்சி, பரவலாக்கும் வழியாக மண்டல வாரியான துணை நகரங்கள் உருவாக்கப்படும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயலிழந்து கிடக்கிறது. அதனை மீட்டெடுத்து சரி செய்யப்படும். மாநில தன்னாட்சி உரிமைக் கொள்கைப்படி மருத்துவம் போலவே கல்வியும் மாநில பட்டியலில் மாற்றப்பட அழுத்தம் கொடுக்கப்படும்.
வர்ணாசிரம கொள்கைகள் எந்த வகையில் இருந்தாலும் அதை முழுமையாக தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கும். சமூகத்தை பிராமணர்கள், சத்திரியர்கள், சூத்திரர்கள், வைசியர்கள் என நான்கு பிரிவுகளாக பிரித்து வைப்பது தான் வர்ணாசிரமக் கொள்கை. அதை முழுமையாக எதிர்ப்பதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் பனை மேம்பாடு மேற்கொள்ளப்படும், தமிழ்நாட்டின் பானமாக பதநீர் அறிவிக்கப்படும். நாடு முழுவதும் பாஜக அல்லாத பெரும்பாலான கட்சிகள் முன்னெடுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும் தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. முக்கியமாக பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை வளர்ப்போம் ஆகியவையும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்பின்னர் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு மேடையில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு வீர வாள் வழங்கப்பட்டது. இதனை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் இணைந்து வழங்கினர். அதேபோல், விஜய்க்கு தவெக நிர்வாகி பரணி பாலாஜி பகவத் கீதை வழங்கினார். மேலும், பைபிளை ஏசுராஜனும், அரசியல் சாசனத்தை ஜிபி சுரேஷும், குர்-ஆன்-ஐ ஏ. உமர் அப்துல்லாவும் வழங்கினர்.
What's Your Reaction?