தமிழ்நாடு

திருக்குறளை தவறிவிட்ட நிர்மலா சீதாராமன்.. சுட்டிக்காட்டிய வைரமுத்து..

Vairamuthu on Nirmala Sitharaman : நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபோது, திருக்குறளை தவறவிட்டுள்ளதை கவிஞர் வைரமுத்து சுட்டிக்காட்டி உள்ளார்.

திருக்குறளை தவறிவிட்ட நிர்மலா சீதாராமன்.. சுட்டிக்காட்டிய வைரமுத்து..
நிர்மலா சீதாராமன் திருக்குறளை தவறவிட்டத்தை சுட்டிக்காட்டிய வைரமுத்து

Vairamuthu on Nirmala Sitharaman : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை(Central Budget 2024) நேற்று (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட நிர்மலா சீதாராமன், அப்போது தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நேற்று ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்துள்ளார்.

பட்ஜெட் உரையில், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் நலன் சார்ந்து திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். மேலும், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதே அரசின் கொள்கை இலக்காக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

2019ஆம் ஆண்டு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரையை தொடங்குவதற்கு முன், சங்ககாலப் புலவரான பிசிராந்தையாரின் பாடலை மேற்கோள்காட்டினார். அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ் இலக்கியங்களில் இருந்து ஏதேனும் ஒரு செய்யுள் பாடலை மேற்கோள் காட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

திருக்குறள், புறநானூறு போன்ற தமிழ் இலக்கியங்களில் இருந்து பாடல்களை மேற்கோள்காட்டி தமது பட்ஜெட் உரையை தொடங்குவதை வழக்கமாக கொண்டிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று பட்ஜெட் தாக்கலின்போது எதையும் மேற்கோள்காட்டாமல் பட்ஜெட் உரையை வாசித்தார்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இந்த விஷயத்தை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை எழுதியுள்ளார். அதில்,

ஒன்றிய அரசின்
நிதிநிலை அறிக்கையில்
உரிமையும் நியாயமும்
தேவையும் உள்ள தமிழ்நாடு
போகிற போக்கில்
புறக்கணிக்கப்பட்டிருக்கிறது

இது
அறிந்தே செய்யும் அநீதி

தனக்கு எதிராகக்
குடைபிடித்தவனுக்கும்
சேர்த்தே பொழிவதுதான்
மழையின் மாண்பு

மழை
மாண்பு தவறிவிட்டது

நிதிநிலை அறிக்கையில்
குறள் ஒன்று கூறுவது
எழுதாத மரபு.
இவ்வாண்டு விடுபட்டுள்ளது

எழுத வேண்டிய குறள்
என்ன தெரியுமா?

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

- என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும், தமிழ்நாட்டுக்கு அறிவிப்பில் ஏதும் இல்லை! நிதியமைச்சரே வழக்கமாக மேற்கோள் காட்டும் திருக்குறளும் இல்லை! என சுட்டிக்காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.