அரசியல்

Minister L Murugan : திட்டங்களுக்கான விதிமுறையை ஒப்புக் கொள்ளமாட்டோம், ஆனால் நிதி மட்டும் வேண்டும்- எல்.முருகன் சாடல்

Union Minister L Murugan on DMK : திட்டங்களுக்கான விதிமுறையை ஒப்புக் கொள்ளமாட்டோம் ஆனால் நிதி மட்டும் வேண்டும் என்று கூறுவது எப்படி? திமுகவினர் அரசியலுக்காக போலி வேடமிடுகின்றனர் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

Minister L Murugan : திட்டங்களுக்கான விதிமுறையை ஒப்புக் கொள்ளமாட்டோம், ஆனால் நிதி மட்டும் வேண்டும்- எல்.முருகன் சாடல்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

Union Minister L Murugan on DMK : தமிழ்நாடு பாஜக-வின் மத்திய சென்னை மாவட்டம் சார்பாக சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாரத் மாதாகி ஜெ என்று கோஷமிட்டு உரையை தொடங்கிய போது தொண்டர்கள் மத்தியில் குறைவான அளவிலேயே சப்தம் எழும்பியது. இதன் பின்னர், இங்கேயே கேட்கவில்லை ஸ்டாலினுக்கு எப்படி கேட்கும் என தொண்டர்களை நோக்கி கேள்வி எழுப்பியபடி உரையை  தொடங்கிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், 

பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையான ஆட்சியில் பட்ஜெட்டின் மிக முக்கியமான நோக்கம் என்னவென்றால் இந்த பட்ஜெட் ஏழை எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தாய்மார்களுக்கான பட்ஜெட். இந்த 4 வர்க்கத்தையும் மேம்படுத்தினால்தான் 2047-ஆம் ஆண்டு இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக, உலகுக்கு வழிகாட்டும் வல்லரசு நாடாக இருக்கும் என்கிற தொலைநோக்கு, சிந்தனைக்கான பட்ஜெட். 

12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் அனைவருக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழுமையான வரிவிலக்கை பிரதமர் அளித்துள்ளார். கடந்த 10 வருடங்களாக நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் தொழில்துறை விவசாயத்துறை, உள்கட்டமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சிவிகிதம் அதிகளவில் உள்ளது.  

முத்ரா லோன் தொகை 20 லட்சமாகவும், குடிநீருக்காக சிரமப்படக் கூடாது, குடிநீருக்காக லாரிகளுக்கு மக்கள் காத்திருக்க கூடாது என்பதற்காக ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கே குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் அளிக்கப்படுகிறது. யாரும் இப்போது டேங்கர் லாரிகளுக்காக காத்திருக்க வேண்டியது இல்லை.

2028-ஆம் ஆண்டுக்குள் வீடுகளுக்கே குடிநீர் குழாய் வழங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். 400 ஸ்டார்ட் அப்கள்தான் 2014-ஆம் ஆண்டுக்கு முன்புவரை இருந்தன. பிரதமரின் ஊக்கத்தின் காரணமாக தற்போது 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது. வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக இளைஞர்களை பிரதமர் மோடி மாற்றி உள்ளார்.

 உலகிலேயே அதிகமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாடாக 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. ஜன் ஆரோக்கியா திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு வழங்க பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தொழிற் நிறுவனங்களுக்கான கடன் பெறும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அறிவியல் ரீதியாக மேம்பாட்டை அடைய 50 ஆயிரம் பள்ளிகளில் அடல் லேப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 11 கோடி விவசாயிகளுக்கு 3 தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தன் தான்ய திட்டத்தில் 100 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விவசாயம் ஊக்குவிக்கப்பட உள்ளது. மீனவர்கள், விவசாயிகளுக்கான கிஷான் கிரெடிட் கார்டின் வரம்ப்பை 5 லட்சமாக பிரதமர் உயர்த்தி அளித்துள்ளார். 

கடல்சார் வளர்ச்சிக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் பிரதமர் அளித்துள்ளார். ரயில்வேக்கு 800 கோடிதான் 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் - திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த பட்ஜெட்டில் ஆறாயிரத்து 628 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களில் இரண்டாயிரத்து 248 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதைகள் தமிழ்நாட்டில் மின்மயமாக்கப்பட்டுள்ளது. 

அம்ரித் பாரத் திட்டத்தில் தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் 3 ஆயிரம் கோடி செலவில் சர்வதேச தரத்துடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புற்றுநோய் மருந்துக்கு சுங்கவரி ரத்து, மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பட்ஜெட்டின் நோக்கம் 2047 சுதந்திரத்தை வல்லரசாக கொண்டாடும் நோக்கில் அதனை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும் என்பதை நோக்கி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவில் தொடங்கப்பட்ட 7 ஜவுளிப் பூங்காவில் முதல் பூங்கா தமிழ்நாட்டிற்குதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

618 உயர்மட்ட ரயில் பாதைகள் கட்டப்பட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கை மூலமாக தாய்மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை தமிழ்நாடு மக்கள் சொல்ல முடியாத துக்கத்தில் உள்ளனர். மின்கட்டணம், பத்திரப்பதிவு, வீட்டு வரி ஆகியவற்றை அதிகரித்து திமுக கொள்ளையடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு சுமையை மக்கள் தலைகளில் கட்டிவிட்டனர். 

விலைவாசி குறைப்பு, அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை எனக் கூறிவிட்டு தகுதியானர்வர்களுக்கு கொடுப்பதாக கூறுகின்றனர். பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். அண்ணா பல்கலைக்கழக மாணவியை வன்கொடுமை செய்தது திமுகவைச் சேர்ந்தவர் என்று கூறியது பாஜகதான். 

அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தது பாஜக. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. பட்டியல் மக்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கிறது. திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மனைவியையே வெட்டிக் கொலை செய்கின்றனர். திமுகவினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. போலி திராவிட மாடல் அரசு தமிழ்நாடு மக்களை மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கியது போலி திராவிட மாடல் திமுக அரசு. திமுக என்றால் ஏமாற்று, திமுக என்றால் திருட்டு, திமுக என்றால் ஊழல் என்று இருந்தது. திமுக என்றால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் என்பதாக உள்ளது. தமிழ்நாட்டின் மிக முக்கியமான கனிமங்களை தமிழ்நாடு அரசு கொள்ளையடித்து வருகிறது எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் இன்றைய தமிழ் இளைஞர்கள் திமுகவின் போலி வாக்குறுதிகளை நம்பமாட்டார்கள். சர்வதேச அளவில் தமிழர்கள் புகழ் பெற வேண்டும் என்பதுதான் பிரதமரின் நோக்கம். அதற்குதான் பல தரப்பட்ட ஆலோசனைகள் நடத்தி புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது

ஆரம்பகல்வி அளவிலேயே தாய் மொழியான தமிழ்மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மும்மொழிக் கொள்கை உள்ளது. ஆங்கிலம் மட்டும்தான் கற்றுக் கொடுக்க வேண்டுமா? திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் எதில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது?  உலகம் முழுசதும் பிரதமர் மோடி தொடர்ந்து தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

பி.எம்.ஸ்ரீ உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் போது அதற்கான விதிமுறைகளை ஒப்புக் கொண்டால் அரசு முழுமையாக ஆதரவளிக்கும் என்றுதான் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார். திட்டங்களுக்கான விதிமுறையை ஒப்புக் கொள்ளமாட்டோம் ஆனால் நிதி மட்டும் வேண்டும் என்று கூறுவது எப்படி? திமுகவினர் அரசியலுக்காக போலி வேடமிடுகின்றனர்.

திமுகவின் அரசியலுக்காக மாணவர்கள் பலியாக்க கூடாது. 1960-கள் கிடையாது மொழியை வைத்து ஆட்சிக்கு வர. தற்போதைய இளைஞர்கள் வளர்ச்சியை விரும்புபவர்கள். திமுக பின்னாடி செல்பவர்கள் என்று கூறினார்.