ஜோதிடரிடம் ஆலோசனை செய்தார் உதயநிதி.. சனாதன தர்மத்திற்கு பரிகாரம்.. பாஜக நிர்வாகி அதிரடி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குடும்ப ஜோதிடர் ஆலோசனையின் பேரில், தான் செய்த தவறை சரி செய்ய கிரிவலம் வந்ததாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.

Oct 20, 2024 - 03:07
 0
ஜோதிடரிடம் ஆலோசனை செய்தார் உதயநிதி.. சனாதன தர்மத்திற்கு பரிகாரம்.. பாஜக நிர்வாகி அதிரடி
உதயநிதி ஸ்டாலின் ஜோதிடர் ஆலோசனையின் பேரில் கிரிவலம் வந்தார் - ஏ.என்.எஸ். பிரசாத்

திருவண்ணாமலை மாநகரில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மேலும், கிரிவலப் பாதையில், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நவீன சுகாதார வளாகம், குடிநீர் வசதி மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

இது குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அவர்கள் கிரிவலம் போக ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற வகையில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்" எனக் கூறியிருந்தார். ஆனால், அதற்கு பதலளித்திருந்த உதயநிதி, “திருவண்ணாமலையில் ‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – ‘சரி’ வலம்!” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், “திருவண்ணாமலையில் உதயநிதி நடத்தியது 'கிரி'வலமா? 'சரி'வலமா? சனாதன தர்மத்திற்கான பரிகாரமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் செய்தும் திருந்தவில்லை என்பது அவருடைய சமீபத்திய எக்ஸ் தள பதிவு காட்டுகிறது. பாஜக எத்தனை சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது என பயத்தின் காரணமாகவும், அறியாமையிலும் துணை முதல்வர் உதயநிதி பிதற்றுகிறார்.

திருவண்ணாமலையில் கிரிவலம் செய்தும் திருந்தவில்லை என்பது அவருடைய சமீபத்திய எக்ஸ் தள பதிவு காட்டுகிறது. பாஜக தமிழகத்தில் அரசியலையும் ஆன்மீகத்தையும் காத்து, இணைத்து தான் திமுகவை வீழ்த்தப் போகிறது. போலி ஆன்மீக முகமூடி அணிந்து உதயநிதி செய்யும் அரசியல் இனி எடுபடாது.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று சொல்பவர்கள் ஒழிந்து போவார்கள் என்று குறிப்பிட்டதற்கு அஞ்சி, செய்த பாவத்திற்கு பரிகாரமாக குடும்ப ஜோதிடர் ஆலோசனையின் பேரில், தான் செய்த தவறை சரி செய்யும் "சரி வலம்" ஆக கிரிவலம் வந்ததை, திராவிட பாணியில், "உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பாசாங்கு மொழி நடையில் பேசி உண்மையை மறைத்து நடிகர் உதயநிதி அரசியலிலும் நடித்து மக்களை ஏமாற்ற முடியாது. 

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களே! மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு அர்ச்சகர் தன் குடும்பத்துடன் வாழ முடியுமா? ஒரு குறிப்பிட்ட கோவிலில் ஒருவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தை பொதுவெளியில்  குறிப்பிட்டு பேசும்போது, அர்ச்சர்களின் மனநிலை, சுயமரியாதை பாதிக்கப்படுகிறது என்பதை அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு சொல்லிக் கொடுங்கள்.

யாரோ ஒரு சில அர்ச்சகர் செய்யும் எதார்த்தமான தவறுக்காக, ஒட்டுமொத்த இறை தொண்டர்களை அவமதிக்கும் வகையில், தவறாக சித்தரிக்கப்படுவதற்கான சூழ்நிலையை மாற்றுவதற்கு தமிழக அரசு முயல வேண்டும். இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு, தமிழக அரசும், தமிழக அறநிலைத்துறையும், அமைச்சர் சேகர்பாபு மட்டுமே காரணம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

இன்றைக்கு இந்து மக்களின் வழிபாட்டு முறைகளுக்கும் கோவிலில் நடக்கும் நித்திய பூஜைகளுக்கும், கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள், பூசாரிகள்,தீட்சிதர்கள், ஐயர்கள், ஐயங்கார்கள், நம்பூதிரிகள், மேல் சாந்திகள் என பல சமூகத்தை சேர்ந்தவர்கள் பல காரணங்களுக்காக அந்தந்த கோவிலின் பாரம்பரியம் பெருமை புனிதம் ஆகம விதிகள் இவற்றிற்கு ஏற்பவாறு மிகவும் நுட்பமான முறையில் நம்முடைய முன்னோர்கள் சிந்தித்து வழிபாடுகளை உருவாக்கி இருக்கின்றனர். அதன் புனிதத்தை காக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.

பல நூறு ஆண்டுகளாக இந்து மதத்தை அழிக்க செய்யப்பட்ட அனைத்து சதிகளையும், ஆன்மீக வளர்ச்சியை தடை செய்ய நடத்தப்பட்ட அனைத்து விதமான போர்களையும் துணிவோடு எதிர்த்து நின்று, தங்கள் உயிர் பொருள், உடைமை, வாழ்க்கை அனைத்தையும் தியாகம் செய்து சனாதன தர்மத்தை காத்து நிலைநிறுத்த, நம் முன்னோர்கள் செய்த தியாகம் ஈடு இணை இல்லாதது. 

அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி வழங்கிய சோழ சேர பாண்டிய, விஜயநகர பேரரசுகள், வீர சிவாஜி கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் தொடங்கி மகாத்மா காந்தி சுபாஷ் சந்திரபோஸ், மகாகவி பாரதியார் வரை சனாதன தர்மத்தின் வலிமையால் தான் சுதந்திரத்திற்காக எழுச்சியோடு போராடி தங்கள் இன்னுயிரை இழந்து சுதந்திரம் பெற்றனர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும் வகுப்புவாதமும் சாதிய மோதல்களும் துளிர்விட்ட பிறகு, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் இந்து விரோத போக்கால், இந்து மதத்திற்கு எதிரான நிலைப்பாட்டால், அதைத் தொடர்ந்து அவர் அறிவித்த நெருக்கடி நிலை பிரகடனத்தால் இந்தியா முழுவதும் காங்கிரஸ் படிப்படியாக அழிவு நிலைக்குச் சென்றது.

திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகமும், இந்து மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் வகையில், மனுவாதம், மதவாதம் என பல தவறான கற்பனை கதைகளை அவிழ்த்து விட்டு, இந்து மதத்திற்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்து இந்து கோவில்களின் பூஜைகளையும் ஆகம விதிகளையும் வழிபாட்டு நடைமுறைகளையும் படிப்படியாக அழித்துக் கொண்டே வந்தனர்.

அரசியலுக்காக, இந்து மதத்தைச் சார்ந்த கடவுள் நம்பிக்கைக்கு எதிராகவும், கிறிஸ்துவ இஸ்லாமிய கடவுள் வழிபாட்டு முறைக்கு ஆதரவாகவும், திட்டமிட்ட சதி செயல்களை அரங்கேற்றி, இந்துமத நம்பிக்கையை, ஆன்மீக கோட்பாடுகளை சிதைக்கும் வகையில் தமிழகமெங்கும் வன்முறை வெறியாட்டங்களை நடத்தி, சிறுபான்மை வாக்கு வங்கிகளை உருவாக்கி இன்று கீழ்த்தரமாக, பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்து ஆணவத்துடன் சனாதன தர்மம் குறித்து ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசி அருவருக்கத்தக்க ஆபாச அரசியல் செய்து தான் திராவிட மாடல் ஆட்சி உருவாகியது.

தமிழகத்தில் 75 ஆண்டுகளாக சூழ்ந்திருந்த திராவிட கடவுள் மறுப்புக் கொள்கை எனும் இருள் அகன்று, சனாதன தர்மம் என்ற கலங்கரை விளக்கின் விழிப்புணர்வு வெளிச்சம் பாய்ந்து, மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும்.

இனி இந்து விரோத திராவிட ஆட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியுடன் பாஜக ஆட்சி அமையும் அறநிலையத்துறையை ஒழித்து இந்து கோவில்களும் இந்து மக்களும் இந்து மதமும் பூரண சுதந்திரத்துடன், சனாதன தர்மத்தை கொண்டாடி மகிழும்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow