Actor Vijay Tamilaga Vetri Kazhagam Flag Case : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 22) வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய், கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை தனது தாய் தந்தை முன்னிலையில் வெளியிட்டார் விஜய்.
கட்சி கொடியில் சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகை பூ, யானை, என வெற்றியை பிரதிபலிக்கும் விதமாகவே கட்சியின் கொடி இருந்தது. மேலும், தமன் இசையில் வெளியான தவெகவின் பாடல் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, விஜய் தவெக கட்சியின் உறுதிமொழியை ஏற்றார்.
தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நிலையில் அந்த கொடியில் சட்டத்திற்கு புறம்பான மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பான சின்னங்கள் பதிக்கப்பட்டு இருப்பதை கண்டித்து விஜய் மீது தேசக்குற்ற வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆர்.கே நகர் பகுதியை சேர்ந்தவர் ஆர்.டி.ஐ. செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அந்த கொடியில் சட்டத்திற்கு புறம்பாக கேரளா மாநிலத்தின் போக்குவரத்து கழகத்தின் அரசு சின்னமான யானை சின்னம் இடம் பெற்று உள்ளது. மேலும் வெள்ளாளர் சமூகத்தில் பயன்படுத்தி வரும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடியின் நிறமும், ஸ்பெயின் நாட்டின் தேசிய கொடியின் நிறமும், ஈழத் தமிழர்களின் சின்னமாக விளங்கும் வாகை பூவின் சின்னத்தையும் தவறாக பயன்படுத்தி உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2012ஆம் ஆண்டு உத்தவ் தாக்குரே தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெள்ளத் தெளிவாக, சட்டசபை தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் அல்லது தேர்தல் சின்னத்திலும் விலங்குகளை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறமானது மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறமானது என்று கூறியுள்ளது. ஆகவே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மீது ஸ்பெயின் நாட்டை அவமானம் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்ட நடிகர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
ஸ்பெயின் நாட்டின் தூதரக தலைவர் அவர்களுக்கும், இந்திய தூதரக அலுவலக தலைவர் அவர்களுக்கும், சென்னை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணைய விதிமுறையின்படி எந்த ஒரு கொடியிலும் கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து உயிருள்ள ஜீவன்களை மிருகம், பறவை, போன்ற பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் விதிமுறை உள்ளது.
அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் யானைச் சின்னம் இடம்பெற்றுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து தான் தேர்தல் விதிமுறையில் இடம் பெற்றுள்ளது. ஆகையால் தேர்தலுக்கு எதிராக நடிகர் விஜய் செயல்படுவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் என்ற முறையில் புகார் அளித்துள்ளேன். புகார் மீது நடவடிக்கை இல்லை என்றால் கண்டிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.