சென்னை: தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் வஞ்சித்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார். ''சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி தர மறுக்கிறது. தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக திணிக்க முயற்சிக்கிறது. கல்வி மற்றும் சமத்துவத்தை ஒன்றிய அரசு ஊக்குவிக்கும் லட்சணம் இதுதானா?'' என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''முதல்வர் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு மாணவர்களின் நலனுக்காக புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்நிலையில், அரசியல் லாபத்திற்காக தேசிய கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பதாக தமிழ்நாடு பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''உங்களுக்கான நிதி மறுக்கப்படுகிறது என்பதை விட, உங்கள் அரசியல் லாபத்திற்காக தமிழக மாணவர்களின் சிறந்த எதிர்காலத்தை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்பதுதான் நிதர்சன உண்மை மு.க.ஸ்டாலின்.
* ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மற்ற திட்டங்களை செயல்படுத்த மறுத்துவிட்டு, அதிலிருக்கும் ஒரு திட்டத்திற்கு மொத்த நிதியை கொடுங்கள் என்று நீங்கள் கேட்பது எந்த வகையில் சரி?
* கடந்த வருடம் SSAவின் கீழ் வழங்கப்பட்ட மொத்த நிதியில், எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் விளக்கிக் கூற முடியுமா?
* ASERன் படி தமிழகத்தின் பதின்ம வயது மாணவர்கள் தமிழில் எழுதப் படிக்க தடுமாறும் நிலை உருவாகியுள்ள வேளையில், தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) நீங்கள் எதிர்ப்பதன் காரணம் என்ன?
* எளிய பின்புலமுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், NEP மூலம் இலவசமாக பிற மொழிக் கற்கும் வாய்ப்பு கிடைக்கையில், அதற்கு முட்டுக்கட்டை போட்டு அந்த வாய்ப்பைத் தட்டி பறிப்பது தான் ஒரு மாநில முதல்வருக்கான இலக்கணமா?
* மேலும், அரசுப்பள்ளிகள் ஆசிரியப் பற்றாக்குறையால் திணறுவதும், பள்ளி மாணவர்களே கழிவறைகளைக் கழுவும் அவல நிலையும், இடிந்து விழும் மேற்கூரைகளால் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அஞ்சுவதும் உங்களுக்கு தெரியுமா?
* இவ்வாறு, சீர்குலைந்துள்ள தமிழக பள்ளிக் கல்வித் துறையினால், அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் நீங்கள், அனைவருக்கும் சமமான தரமான கல்வியை வழங்கும் NEPயை கண்மூடித்தனமாக எதிர்ப்பது ஏன்?
எனவே, தரமான கல்வித் திட்டம் தமிழக மாணவர்களுக்கு கிடைத்து விட்டால், உங்களின் திராவிட மாடல் எனும் மாயை உடைந்து சிதறிவிடும் என்ற பயத்தில், NEP யை எதிர்க்கும் நீங்கள், தமிழக மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை இருப்பது போல கபடநாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, NEP மூலம் தமிழக மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.