தமிழ்நாடு

பேரிடர் மீட்பு படை கண்காட்சி... ஆர்வமுடன் பார்த்து சென்ற பொதுமக்கள்!

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்பு படை கண்காட்சி... ஆர்வமுடன் பார்த்து சென்ற பொதுமக்கள்!
பேரிடர் மீட்பு படை கண்காட்சி... ஆர்வமுடன் பார்த்து சென்ற பொதுமக்கள்!

வடகிழக்கு பருவமழையொட்டி, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை சார்பாக, ஆவடி காவல் ஆணையரக வளாகத்தில் உள்ள, பேரிடர் மையத்தில் 2 நாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை விஜயகுமாரி ஐ.பி.எஸ் ,டாக்டர் தீபா சத்யன் ஐ.பி.எஸ் மற்றும் 13வது பட்டாலியன் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை கமாண்டண்ட் ஆகியோர் பேரிடர் மீட்பு படை வீரரை அழைத்து ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இந்த நிலையில் 986 பேரிடர் மீட்பு குழுவினர் தமிழகம் முழுவதிலும் ஏற்படும் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொண்டு சவாலான பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

இன்றும் (அக். 25) நாளையும் (அக். 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு காட்சிபடுத்தும் விதமாக ஆவடி காவல் ஆணையரக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பேரிடர் படை தலைமை அலுவலகத்தில் சாதனங்கள் மற்றும் கருவிகளை காட்சிப்படுத்தியுள்ளனர். புயல், மழை மற்றும் விபத்து ஏற்படும் சவாலான பேரிடர் காலங்களில் பயன்படுத்தக்கூடிய உயிர் காக்கும் மற்றும் மீட்பு கருவிகள், சாதனங்கள் மற்றும் உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்கின்ற விளக்கத்தை கொடுக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் பேரிடர் காலங்களில் மீட்பு குழுவினரின் பணிகள் எவ்வாறு இருக்கும், கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்பது எப்படி என்பன குறித்து தத்துரூபமாக காட்சிப்படுத்தினர். இதில் மினி ட்ரோன் கேமரா, மீட்பு பணிகளில் உணவு, மருந்து மற்றும் லைப் ஜாக்கெட் உள்ளிட்ட உயிர் காக்கும் பணிகளில் பயன்படுத்தும் ராட்சத கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று மண்ணில் புதையுண்டர்களை கண்டுபிடிக்கும் VLC கேமரா மற்றும் ரயில் விபத்து போன்ற இரும்பு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க பயன்படும் ஹைட்ராலிக் ஜாக்கி மற்றும் இரும்பு வெட்டும் கருவிகள், ரப்பர் மற்றும் பைபர் படகுகள், மரம் வெட்டும் உபகரணங்கள் செயின்ஸா டைமன்ட் சா , பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய கருவிகள் உள்ளிட்டவை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பேரிடர் நேரத்தில் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் சேட்டிலைட் போன்கள் மூலம் தொடர்பு கொள்ளும் சாதனமும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கல் குவாரிகளில் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ரேடார் கருவிகள்,  தண்ணீரை வெளியேற்றும் ராட்சத மோட்டார் பம்புகள் மற்றும் ஜெனரேட்டர் இயந்திரங்கள், மின்சார உற்பத்தி செய்து மின்விளக்குகளை பயன்படுத்துதல் போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கல் மற்றும் மாணவ மாணவியர் ஆர்வமுடம் பார்த்து சென்றனர்.