Felix Gerald Bail : ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்.. ஆனாலும் நீதிபதி வைத்த செக்!
Felix Gerald Bail on Savukku Shankar Case : சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய 'ரெட் பிக்ஸ்' யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார். ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
Felix Gerald Bail on Savukku Shankar Case: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் அவரது யூ-டியூப் சேனலை முடக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மற்ற மாவட்ட நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. இதில் பல வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், சில வழக்குகளில் அவருக்கு இன்னும் ஜாமீன் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய 'ரெட் பிக்ஸ்' யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார். ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி T.V. தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேகநாதன், சர்ச்சைக்குரிய வகையில் இனி பேச மாட்டேன் என இதுபோன்ற வழக்கில் ஏற்கனவே ஃபெலிக்ஸ் ஜெரால்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும் ஆனால் அதனை மீறி தொடர்ந்து இப்படி பேசி வருவதாகவும் கூறினார்.
பின்பு ஃபெலிக்ஸ் ஜெரால்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், தனது பேச்சுக்கான விளைவை தற்போது தான் உணர்ந்துள்ளதாகவும் இனி ஒரு போதும் இவ்வாறு பேச மாட்டேன் எனவும் ஃபெலிக்ஸ் ஜெரால்டு உறுதி அளித்ததாகவும் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் அவரது யூ டியூப் சேனலை மூட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய வகையில் இனி நேர்காணல் அளிக்க மாட்டேன் என விசாரணை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதி நிபந்தனை விதித்தார். ஃபெலிக்ஸ் ஜெரால்டு நீண்டகாலமாக ஜாமீன் கேட்டு போராடி வந்த நிலையில், தற்போது ஒருவழியாக அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
What's Your Reaction?