உதகையில் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் கா.ராமச்சந்திரன்
‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை உதகை அரசு கலைக் கல்லூரியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்த பின்பு பயனாளிகளுக்கு வங்கி கணக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் "தமிழ்ப் புதல்வன்" திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் இன்று தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் தோராயமாக 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் கடந்த 5ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 3.28 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உதகை அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து 25 தமிழ் புதல்வன் திட்ட பயனாளிகளுக்கு வங்கி கணக்கு பற்று அட்டைகளை வழங்கினார். முதல் கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தில் 1090 மாணவர்கள் பயன் பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், “தமிழ் புதல்வன் திட்ட தொடக்க விழாவில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 14 கல்லூரிகளில் பயிலும் 1090 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். முதற்கட்டமாக தமிழ் புதல்வன் திட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் 190 மாணவர்களுக்கு ரூபாய் 1000 வீதம் ரூபாய் 10,90,000 வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியாண்டு முதல் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மாணவர்கள் வேறு எந்த உதவி தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்திலும் பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: நானும் தந்தைதான்.. மாணவர்கள் திசை மாறக்கூடாது.. முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
What's Your Reaction?