செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தலா?... நடந்தது என்ன? அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்!

செங்கல்பட்டில் குழந்தைகள் 2 பேரும் கடத்தப்பட்டதாகவும், ஒரு பள்ளியின் முன்பே குழந்தைகளை கடத்திச் செல்லும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீரழிந்துள்ளது எனவும் நேற்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வந்தனர்.

Jul 9, 2024 - 09:51
 0
செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தலா?... நடந்தது என்ன? அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்!
செங்கல்பட்டு பள்ளி மாணவர்கள்

சென்னை: செங்கல்பட்டு அருகே உள்ள ஓழலூர் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவர் என 2 பேரை மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றதாக தகவல் வெளியானது. கடத்தப்பட்டது அதே பகுதியை சேர்ந்த வேலன்-ஆர்த்தி தம்பதியின் 11 வயது மகள் மற்றும் 7 வயது மகள் எனவும் தகவல்கள் பரவின. 

அதாவது ஓமலுர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேலன் (31). இவரது மனைவி ஆர்த்தி (30). இவர்களுக்கு 11 வயது மகளும், 7 வயது மகனும் உள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனை கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆர்த்தி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். குழந்தைகள் வேலனுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில்தான் குழந்தைகள் 2 பேரும் கடத்தப்பட்டதாகவும், ஒரு பள்ளியின் முன்பே குழந்தைகளை கடத்திச் செல்லும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீரழிந்துள்ளது எனவும் நேற்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் வேலன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பள்ளி அருகே உள்ள காண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தப்படவில்லை என்றும் அவர்களின் தாய் ஆர்த்தியே குழந்தைகளை அழைத்துச் சென்றதாகவும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு வெளியிட்ட பதிவில், ''செங்கல்பட்டில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வெளியே செல்வதற்காக வந்த குழந்தைகள் இருவர் கடத்தல் என்ற செய்திகள் வெளியாகின.

இந்த செய்தி உண்மை அல்ல. குழந்தைகளின் தாய்-தந்தையர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகையில், குழந்தைகளின் தாய்தான் அவரின் நண்பர் மூலம்  குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார்.

குழந்தைகளின் தந்தை அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாயால் அழைத்துச் செல்லப்பட்ட இரு குழந்தைகளும் மீட்கப்பட்டனர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்'' என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு கூறியுள்ளது.

இந்த விளக்கத்தின் மூலம் பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டனர் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow