தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2024-2025ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை இன்று வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து நடப்பு பட்ஜெட்டிற்கான இலச்சினை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் முதல்வர். அந்த பதிவில், ”சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை 2025-2026 நிதிநிலை அறிக்கை உறுதி செய்திடும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதில் தற்போது எழுந்துள்ள பிரச்சினை என்னவென்றால், வெளியிடப்பட்டுள்ள பட்ஜெட் தொடர்பான லோகோவில் இந்தியாவின் ரூபாய் குறியீடு ₹ பதிலாக (ரூ) என்கிற எழுத்து தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு, பட்ஜெட்டுக்கான லோகோவில் இந்திய ரூபாயின் குறியீடு ‘₹’ தான் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விவாதங்கள் எழும்புவதற்கு என்ன காரணம்?
மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நேரத்தில் தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. இருமொழிக் கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பின்பற்றும் தமிழ்நாடு, மும்மொழிக் கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. PM SHRI SCHOOL திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழக அரசின் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியினை ஒதுக்க முடியும் என வெளிப்படையாக பேசினார் மத்திய கல்வி அமைச்சர். அதோடு, நாடாளுமன்றத்தில் தமிழர்களை பற்றி அவர் குறிப்பிட்ட கருத்து சர்ச்சையினை கிளப்பிய நிலையில் அதற்கு வருத்தமும் தெரிவித்து இருந்தார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
மொழி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த இலட்சினை விவகாரம் அதோடு தொடர்பு கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட…#DravidianModel #TNBudget2025 pic.twitter.com/83ZBFUdKZC
— M.K.Stalin (@mkstalin) March 13, 2025