ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சஜித்தை தாம்பரம் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது போலீசாரை தாக்கி தப்பிச் செல்ல முயற்சித்த திருவேங்கடம் என்ற ரவுடியை தற்காப்புக்காக போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது வரை சுமார் 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளான சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும், அவரது நண்பருமான பிரபல ரவுடி சஜித் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட்டுள்ளார்.
.
கைது செய்யப்பட்ட சஜித் மீது, ஆந்திராவில் ரவுடி சீசிங் ராஜாவுடன் சென்று இரட்டை கொலை செய்த வழக்கு, திண்டிவனம் அருகே பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கு, பாஜக பட்டியல் அணி மாநில செயலாளரும், பிரபல ரவுடியுமான நெடுங்குன்றம் ஆர்.கே.சூர்யாவின் தம்பி உதயா கொலை வழக்கு, தாம்பரத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு, சேலையூரில் ஒரு கொலை முயற்சி வழக்கு, தேனாம்பேட்டையில் கொள்ளை வழக்கு மற்றும் இரண்டு ஆயுத வழக்கு உட்பட 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
அதுமட்டுமின்றி காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ஆராமுதன் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுடன் தொடர்பு, செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்பு என பல முக்கிய குற்றவாளிகளுடன் தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அது தவிர கஞ்சா, போதை மாத்திரை விற்பனை போன்றவற்றிலும் சஜித் ஈடுபட்டு வந்ததும் அவருக்கு அவரது மனைவி உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ரவுடி சஜித் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சீசிங் ராஜாவுடன், சஜித் தொடர்பில் உள்ளாரா, சீசிங் ராஜா இருக்கும் இடம் சஜித்துக்கு தெரியுமா என தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சஜித் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து பயங்கர ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.