கருணாநிதி பற்றி சீமான் பேசினால் விஜயலெட்சுமி பற்றி பேசுவோம் - எச்சரிக்கும் சுப வீரபாண்டியன்

ஜெயலலிதாவைப் பற்றி இவ்வாறு பேசிவிட்டு, எடப்பாடி பழனிசாமியையும் தரக்குறைவாக விமர்சித்துவிட்டு இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை அவர் கேட்கிறார்.

Jul 15, 2024 - 17:51
Jul 15, 2024 - 17:57
 0
கருணாநிதி பற்றி சீமான் பேசினால் விஜயலெட்சுமி பற்றி பேசுவோம் - எச்சரிக்கும் சுப வீரபாண்டியன்
சீமான் மற்றும் சுப வீரபாண்டியன்

கருணாநிதி பற்றி சீமான் தரக்குறைவாக விமர்சிப்பது தொடர்ந்தால், சீமானைப் பற்றி விஜயலெட்சுமி என்னென்ன பேசியுள்ளாரோ அதனை பொதுவெளியில் மக்களுக்கு எடுத்துச் சொல்வோம் என்று சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகனை கைது செய்ததற்கு எதிராக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைகாட்சிகளுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், “சாட்டை துரைமுருகன் என்னைவிட அதிகமாக பேசவில்லை; அவதுாறாகவும் பேசவில்லை. கருணாநிதியை விமர்சித்து ஏற்கனவே இருந்த பாட்டைத்தான் பாடினார். பாடலை எழுதியவர், பாடியவரை விட்டு விட்டு, மீண்டும் எடுத்து வந்து பாடியவரை கைது செய்துள்ளனர்.

கருணாநிதி என்ன இறைத்துாதரா, இயேசுவா அல்லது பகவான் கிருஷ்ணனா? 'கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி; சதிகாரன் கருணாநிதி; சண்டாளன் கருணாநிதி' என நான் பாடுகிறேன். கருணாநிதி பற்றிய பாடலை பாடுகிற என்னை கைது செய்து பாருங்கள். பிள்ளைப் பூச்சிகளைப் பிடித்து விளையாடும் நீங்கள், தேள், பாம்பு, சிங்கம், புலியோடு விளையாட முடியுமா?

அதிகாரம் வந்தபின், கருணாநிதியை புனிதர் ஆக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதியின் அரசியல் வருகைக்குப்பின், தீய சக்தியின் ஆட்சியும் துவங்கியது. ஊழல், கொலை, கொள்ளை, லஞ்சம், சாராயம் உள்ளிட்டவை, அவரது ஆட்சியில்தான் வந்தது” என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மயிலாடுதுறையில் திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஜனநாயக நாட்டில் யாரைப்பற்றி யாரும் விமர்சனம் செய்யலாம். ஆனால் அது அரசியல் சார்ந்ததாக இருக்க வேண்டும். எந்தவொரு அரசியலும் இல்லாமல், கருணாநிதியைப் பற்றி சீமான் தரக்குறைவாக பேசியதும், பாடியதும் அநாகரிகம்.

இது தொடர்ந்தால், சீமானைப் பற்றி விஜயலெட்சுமி என்னென்ன பேசியுள்ளாரோ அதனை பொதுவெளியில் மக்களுக்கு எடுத்துச்சொல்வோம். அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் நினைவிடம் உள்ள இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடமும் உள்ளதை மூன்று ஆண்களுக்கு இடையில் ஒரு பெண் என்று அவர் பேசியது மிகப்பெரிய அநாகரிகம். 

ஜெயலலிதாவைப் பற்றி இவ்வாறு பேசிவிட்டு, எடப்பாடி பழனிசாமியையும் தரக்குறைவாக விமர்சித்துவிட்டு இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை அவர் கேட்கிறார். தரக்குறைவான அரசியலை தமிழகத்தில் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் சீமானை கண்டிக்கிறோம்.

13 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே பாஜக வென்றுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டியில் திமுக வென்றதை, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்கிறார்கள். ஆனால், பாஜக ஆளும் உத்தரகாண்டில் 3-ல் 2 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ளது. மோடி அரசியலுக்கான எதிர்நிலைக் கருத்து இந்தியா முழுவதும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத்தான் இந்த இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை மட்டும் வைத்து தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது என்று குற்றம்சாட்டுவது ஆளுங்கட்சி மீது வெறுப்பை வளர்ப்பதற்காகத்தான். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக பணம் கொடுத்திருந்தால் அதைப்பற்றி தேர்தல் ஆணையத்தில் பாமக புகார் அளிக்கலாம். எல்லா தேர்தலிலும் இத்தகைய குற்றச்சாட்டுகள் வந்துகொண்டுதான் இருக்கிறது.

அதிமுக தலைமைக்குள் பிரச்னைகள் இருக்கிறதா என கேட்கிறீர்கள், ஆனால் அதிமுகவுக்கு தலைமை இருக்கிறதா என்றே கேள்வி இருக்கிறது. அதிமுக மெல்ல மெல்ல சரிந்துகொண்டிருக்கிறது. அதனை பாஜக திட்டமிட்டு அழித்துக் கொண்டிருக்கிறது. வெளியில் இருக்கும் நமக்கு தெரிகிறது. அது அதிமுகவுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. அதிமுக தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு கடைசி கட்டம் இது” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow