சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இன்று (அக். 13) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு பிரத்தியேக உதவி எண்ணாக 1913 என்ற உதவி எண் கொடுக்கப்பட்டு 150 பேர் நான்கு ஷிப்டக்களாக பணியாற்றி வருகின்றனர். 24 மணி நேரமும் பொதுமக்களின் பிரச்சனைகளை இந்த மையத்திலிருந்து கவனித்து வருகிறோம். 13000 தன்னார்வலர்கள் அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக உள்ளனர்.
தேங்கும் மழை நீரை வெளியேற்றுவதற்காக 113 எண்ணிக்கையில் நூறு எச்பி பம்புகள் தயாராக உள்ளன. மேலும் தீவிர மற்றும் அதி தீவிர மழை எச்சரிக்கை தமிழகத்திற்கு விடப்பட்டுள்ள நிலையில் இதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறோம். அரசு சார்பில் தமிழ்நாடு அலர்ட் என்ற புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் வாயிலாக மழை தொடர்பான அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம். நிறைவடையாத மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களை தடுப்புகள் அமைத்து மூட உத்தரவிட்டுள்ளோம். ஏதேனும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைத்து மூடப்படாமல் இருந்தால் பொதுமக்கள் அதனை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தவறாமல் தெரிவிக்கவும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “356 மெட்ரோ பம்பிங் ஸ்டேஷன்கள் அனைத்தும் முறையாக இயங்க சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மழைநீர் அகற்றுப்பணிகளில் ஈடுபட்டுள்ளன. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. ஆகாய தாமரைகள் இருந்தால் அவற்றை நீக்க அறிவுறுத்தி இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.