லேடிஸ் காலேஜ் முன் பைக்கில் சீன் போட்ட இளைஞர்.. தலை முடியை வெட்டவைத்த போலீஸ்
நாகர்கோவில் சாலையில் கல்லூரி பெண்கள் முன் பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை பிடித்து தலை முடியை வெட்ட வைத்த காவல்துறையினர் 4000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் சேர்ந்தவர் ராகுல் இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இன்ஸ்டாவில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
மேலும் இவர் தனது உயர் ரக இருசக்கர வாகனத்தில் சாலையில் சாகசம் செய்து தனது இன்ஸ்டவில் வீடியோ பதிவு செய்து அதனை பதிவு செய்வார். தொடர்ந்து இவரின் வீடியோக்கள் நாளடைவில் அதிக அளவில் மாணவர்கள், மாணவிகள் மத்தியில் பிரபலமானது. இவரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.
இந்த நிலையில், நாகர்கோவில் மாநகர பகுதியில் அமைந்துள்ள திருவனந்தபுரம் கன்னியாகுமரி தேசிய சாலையில், இவர் பயிலும் கல்லூரி முன்பாக கல்லூரி பெண்கள் மத்தியில் சீன் போட்டு, சாலை நடுவே இரு கைகளையும் விட்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த வீடியோ காட்சிகள் வெளியானது.
இந்த வீடியோக்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி பார்வைக்கு சென்றது. இதனையடுத்து உடனடியாக மாணவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். பின்னர் விவரங்களை சேகரித்து மாணவனை நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
அதற்கு முன்பாக முடிகளை சரியாக சீர்திருத்த வேண்டும் எனவும் பின்னரே வரவேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வந்த கல்லூரி மாணவனை எச்சரித்து அறிவுரை வழங்கி பெற்றோரிடம் எச்சரித்து அனுப்பினர்.
போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூபாய் 4000 அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் இதுபோல் யாரேனும் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
What's Your Reaction?