விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சிலைகளை வைக்க காவல்துறை கடும் கட்டுப்பாடு.. முழு விவரம்!

''மசூதிகளில் தொழுகை நேரங்களில், விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது. பதற்றமான பகுதிகள் வழியாகவும் அனுமதிக்க கூடாது'' என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

Aug 19, 2024 - 07:43
 0
விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சிலைகளை வைக்க காவல்துறை கடும் கட்டுப்பாடு.. முழு விவரம்!
Vinayagar Idols

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 7ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி நாளில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுவது வழக்கம் அதன்பிறகு விநாயகர் சிலைகளை இந்து முன்னணி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பார்கள். 

இந்நிலையில், தமிழ்நாடு முழுதும் விநாயகர்  சிலைகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- 

* ரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். சிலைகளை வைக்கும் முன்பு போலீஸ் உதவி கமிஷனர், ஆர்.டி.ஓ அல்லது துணை கலெக்டரிடம் முன் அனுமதி பெற வேண்டும். 

* தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களில் நிறுவப்படும் சிலைகளுக்கு, அதன் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். பொது இடங்களில், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறுவது அவசியம்.

* ஒலிபெருக்கிகள் வைப்பதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். எங்கிருந்து மின்சாரம் பெறப்படுகிறது? என்ற விபரத்தையும் கடிதம் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும்.

* விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் வைக்க கூடாது.

* இதர மதத்தை சேர்ந்த மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பக் கூடாது. விநாயகர் சிலைகள் நிறுவப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதையில் பட்டாசு வெடிக்க கூடாது.

* விநாயகர் சிலைகளை மினி லாரி, டிராக்டர் வாயிலாக மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் எடுத்து செல்லக்கூடாது.

இதேபோல் டிஜிபி சங்கர் ஜிவால் காவல்துறையினருக்கு விடுத்துள்ள உத்தரவு:-

சமூக விரோதிகள் சிலைகளை சேதப்படுத்துவதை போலீசார் தடுக்க வேண்டும். பதற்றமான இடங்களில் சிலைகள் வைத்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்பதால் அதை அனுமதிக்க கூடாது. மசூதிகளில் தொழுகை நேரங்களில், விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது. பதற்றமான பகுதிகள் வழியாகவும் அனுமதிக்க கூடாது.

மற்ற வழிப்பாட்டு தலங்களை ஊர்வலம் கடக்கும்போது, பட்டாசுகளை வெடிக்கவும், மேள தாளங்களை இசைக்கவும் அனுமதிக்க கூடாது. ஊர்வலம் செல்லும் பாதையில் உரிய அனுமதி இல்லாமல் பேனர்கள் வைப்பதையும், கொடிகள் கட்டுவதையும் தடுக்க வேண்டும். இந்த பாதுகாப்பு ஏற்பாடு நடவடிக்கைகளை, வரும் 30ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும்'' என்று சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow