இளம் வீராங்கனை உயிரிழப்பு... சிக்கன் ரைஸ் காரணமா? அன்று இரவு நடந்தது என்ன?
ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கோவை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலினா உயிரிழந்தாரா என போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராபின் டென்னிஸ். இவரது மகள் எலினா லாரெட் (15). கோவையில் உள்ள பெப்பூல் சிபிஎஸ்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நவம்பர் 08.11.24 முதல் 15.11.24 வரை நடந்தது. இந்த போட்டியில் எலினா லாரெட் கலந்து கொண்டார். இதனையடுத்து போட்டிகள் முடிந்து நேற்று (நவ. 17) அவர் கிரான்ட்ராங் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக சென்னை வந்தார். அப்போது அவருக்கு திடீரென வயிற்று வலி, வாந்தி மற்றூம் மயக்கம் ஏற்பட்டதால், தனது தாய் மாமாவான டேவிட் வில்லியம்ஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பிறகு அண்ணா நகரில் உள்ள சுந்தரம் பவுண்டேஷனில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து சிகிச்சை பெற்ற பிறகு சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில் வசித்து வந்த தனது பெரியம்மா கலா என்பவரின் வீட்டிற்கு எலினா லாரெட் சென்றுள்ளார். அங்கும் திடீரென வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து எலினாவை பரிசோதித்து பார்த்து முதலலுதவி சிகிச்சை மேற்கொண்டனர். பிறகு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதித்துப் பார்த்ததில் எலினா லாரெட் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து பெரவள்ளூர் போலீசார் எலினா லாரெட் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எலினாவின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், எலினாவுக்கு கடந்த இரண்டு நாட்களாகவே வயிற்று வலி, வாந்தி பிரச்சனை இருந்து வந்ததாகவும், இதனால் சுந்தரம் பவுண்டேஷன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு இளநீர் அருந்தியதும் தெரிய வந்துள்ளது. மேலும் குவாலியரில் நடைபெற்ற கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்று விட்டு ரயிலில் எலினா சிக்கன் ரைஸ் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான காரணம் குறித்து தெரிய வரும் என தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?