Wayanad Landslide News Update : கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாமல் கொட்டிய கனமழை காரணமாக வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடியிருப்புகள், அங்கு இருந்த பள்ளிகள் என அனைத்தும் மண்ணுக்குள் புதையுண்டன.
வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே மண்ணில் புதையுண்டும், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 256 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. அங்கு தோண்டத் தோண்ட உடல்கள் வெளியே வந்தவண்ணம் உள்ளன. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரம் வரை உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் ஆகியோர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்ததால் அந்த பகுதி முழுவதும் மக்களின் அழகுரல்களால் மயானமாக உள்ளது. வயநாடு நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ள, நிதியுதவி தந்து உதவுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2-ம் நாளாக நேற்றும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றன. அப்போது, மண்ணில் புதைந்து உயிரிழந்த நிலையில் ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைத்தனர். சூரல்மலை, முண்டக்கை பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே ஏராளமானோர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், முண்டக்கை பகுதியை சேர்ந்த 225 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. அவர்கள் மண்ணில் புதையுண்டனரா, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனரா என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
உயிரிழந்தவர்களில் 94 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உறவுகளை பறிகொடுத்தவர்கள் கதறி அழுதபடி உள்ளனர்.