'முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்'... போலீசுக்கு சீமான் சவால்... சாட்டை துரைமுருகன் கைதுக்கு கண்டனம்!

''கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும், கொலை செய்பவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்காத காவல்துறை, கருணாநிதி பற்றி பேசியதற்காக கைது நடவடிக்கை எடுப்பது வெட்கக்கேடானது''

Jul 11, 2024 - 12:58
 0
'முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்'... போலீசுக்கு சீமான் சவால்... சாட்டை துரைமுருகன் கைதுக்கு கண்டனம்!
சீமான் சவால்

சென்னை: நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் சாட்டை துரைமுருகன். 'சாட்டை' என்னும் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். குறிப்பாக திமுக அரசு மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

இந்நிலையில், சாட்டை துரைமுருகன் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். குற்றாலத்தில் தங்கி இருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிட்டார். 

இதற்காக விக்கிரவாண்டி தொகுதியில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. 

இந்த புகாரின்பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருச்சியில் இருந்து வந்த  சைபர் கிரைம் போலீசார், குற்றால அருவியில் தங்கி இருந்த சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளது நாம் தமிழர் கட்சியினரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சியினர், ''சாட்டை துரைமுருகன் திமுக அரசு செய்யும் தவறுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். இதற்காக அவரை கைது செய்வீர்களா? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. 

ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை அரசு இன்னும் கைது செய்யவில்லை. ஆனால் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும் நபரை காவல்துறை உடனடியாக கைது செய்கிறது. தமிழ்நாடு அரசு காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி வருகிறது'' என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறுகையில், ''முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி பேசியதாக கூறி சாட்டை திருமுருகனை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. 

கருணாநிதி பற்றி பேசியதால் கைது என்றால் காவல்துறையினர் முடிந்தால் என்னை கைது செய்யட்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும், கொலை செய்பவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்காத காவல்துறை, கருணாநிதி பற்றி பேசியதற்காக கைது நடவடிக்கை எடுப்பது வெட்கக்கேடானது. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தெருவுக்கு ஒரு அமைச்சர் பொறுப்பேற்று வாக்காளர்களுக்கு பணம் ,பரிசு பொருட்களை கொடுத்து இருக்கின்றனர். இது அனைவருக்கும் தெரியும். ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல சாதனைகளை செய்திருப்பதாக கூறும் திமுக சாதனைகளை சொல்லி வாக்கு கேட்காமல் எதற்காக வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்களை கொடுத்து வாக்கு கேட்கிறது'' என்று சீமான் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow