அரசியல்

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜர்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார்.

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜர்
சீமான்

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை வளசரவாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். பெங்களூரில் உள்ள நடிகையிடம் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றிருந்தது போலீஸ். இதனைத் தொடர்ந்து சீமானையும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது 

ஆனால் விசாரணைக்கு வருவதற்கு சீமான் தரப்பு அவகாசம் கேட்டது. இதனை நிராகரித்த போலீஸார் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர். இதையடுத்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக ஒப்புக் கொண்டார்.

சேலத்தில் இருந்து சென்னை வந்த சீமான் நேராக வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றார். அங்கு தமது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில்  இரவு 8 மணிக்கு மேல் சீமானை விசாரணைக்கு வரலாம் என போலீசார் தகவல் அனுப்பினர். 8 மணிக்கு மேல் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென போலீஸ் தரப்பில் இருந்து நாங்கள் சொல்லும் பொழுது காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்றும் அதுவரை காத்திருக்குமாறு தகவல் கொடுக்கப்பட்டது. சீமான் காவல் நிலையத்திற்கு ஆஜராக வருகிறார் என்று தகவல் தெரிந்ததும் நாம் தமிழர் கட்சியினர் வளசரவாக்கம் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். 

சீமான் ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டு வளையத்தை தாண்டி உள்ளே வர முற்பட்டனர். காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சரியாக 9.30 மணிக்கு காவல் நிலையத்திற்கு வருகை தந்த சீமானின் காரை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சீமான் நேரில் ஆஜரானார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் காவல்துறையினர் 53 கேள்விகள் கேட்க உள்ளதாகவும் இதனை ஆடியோவாக பதிவு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.