கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு.. வடமாநில கும்பல் அட்டூழியம்

Pudukkottai District Collector Aruna IAS : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஐஏஎஸ் பெயரில் வட மாநில கும்பல் போலி முகநூல் கணக்கு தொடங்கி இருந்த நிலையில் அதனை சைபர் கிரைம் போலீசார் முடக்கினர்.

Sep 24, 2024 - 07:50
Sep 24, 2024 - 12:38
 0
கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு.. வடமாநில கும்பல் அட்டூழியம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஐஏஎஸ் பெயரில் போலி முகநூல் கணக்கு

Pudukkottai District Collector Aruna IAS : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அருணா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவரது பெயரில் வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் முகநூல் கணக்கு தொடங்கி அதில் மாவட்டம் சார்ந்த பதிவுகளையும் பதிவிட்டு இருந்தனர்.

ஆனால் அந்த முகநூல் பக்கத்தில் மாவட்ட ஆட்சியர் அருணாவின் பிறந்த தேதி சந்தேகத்திற்கு இடமான வகையில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால் பலரும் சந்தேகமடைந்து, இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறையினருக்கும் தகவல்கள் வந்த நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாவட்ட ஆட்சியர் அருணாவின் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கியது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட போலியான முகநூல் கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கி உள்ளனர்.

சமீப காலங்களாக ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிரா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரால் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு பண மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் சில கும்பல்கள் ஈடுபட்டு பணம் பறித்து வருகின்றனர். மேலும், சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், சென்னை அபிராமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி பதிவு செய்து வருவதாக, காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.

முக்கியமாக, சென்னை காவல் ஆணையர் அருண் பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்தி மோசடி முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர். வாட்ஸ்அப் டிபியில் காவல் ஆணையர் அருண் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவதாக புகைப்படம் ஆதாரத்துடன் ஒருவர் புகார் அளித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

உலக அளவில் பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பறிப்பதற்காக சர்வதேச மோசடி கும்பல்கள் கம்போடியா, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் அடுக்குமாடி கட்டட வணிக வளாகங்களில் அலுவலகம் நடத்தி மிகப்பெரிய சைபர் கிரைம் மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

அதிலும் இந்தியாவில் உள்ளவர்களை ஏமாற்றுவதற்காக, வெளிநாட்டு வேலை, கை நிறைய சம்பளம் என ஆசை வார்த்தை காட்டி இந்திய இளைஞர்களை ஆட்கடத்தல் செய்து, சைபர் கிரைம் அடிமைகளாக நடத்தி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow