தமிழ்நாடு

நீட் கோச்சிங் சென்டரில் மாணவர்கள் மீது தாக்குதல்... வேட்டையன் பட பாணியில் அத்துமீறல்... பகீர் வீடியோ

நெல்லையில் தனியார் நீட் கோச்சிங் சென்டரில், மாணவர்கள் மீது ஆசிரியர் கொடூரமாக தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நீட் கோச்சிங் சென்டரில் மாணவர்கள் மீது தாக்குதல்... வேட்டையன் பட பாணியில் அத்துமீறல்... பகீர் வீடியோ
நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்

திருநெல்வேலி: நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட அடித்து சித்திரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ரஜினியின் வேட்டையன் படத்தில், நீட் கோச்சிங் சென்டரில் நடக்கும் மோசடிகள் குறித்து காட்சிகள் இடம்பெற்றிருந்தன. நீட் எக்ஸாமில் கண்டிப்பாக பாஸ் செய்ய வைத்து மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி, மாணவர்களிடம் பணம் மோசடி செய்யப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அவர்கள் மீது உளவியல் ரீதியான தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் வேட்டையன் படத்தின் காட்சிகள் இருக்கும்.

ஆனால், நிஜத்தில் மாணவர்கள் மீது அதைவிட மிக கொடூரமான தாக்குதல் நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை தொடர்ந்து, மாணவ, மாணவிகள் நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்கும் நிலை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் ஏராளமான நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் என்பவர், பிரபல பயிற்சி மையத்தின் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு ஜல் (JAL NEET ACADEMY) என்ற நீட் பயிற்சி மையத்தை தொடங்கினார். 

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் இந்த நீட் பயிற்சி மையத்தில் இருந்து, கடந்தாண்டு 12 பேர் அரசு மருத்துவக் கல்லூரி இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தாண்டு அதிகளவிலான மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளனர். இந்த பயிற்சி மையத்தில் மாணவர் ஒருவருக்கு, சராசரியாக 60,000 ரூபாய் முதல் 80,000 வரை கட்டணமாக வசூல் செய்யப்படுவதாகவும் தெரிகிறது. மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள் அமைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

தினமும் 12 மணி நேரத்துக்கும் மேலாக பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், மாணவர்கள் அடிக்கடி சோர்ந்துவிடுகின்றனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு காலை நடந்த தேர்வு முடிந்து மற்றொரு ஆசிரியர் வருவதற்கு தாமதமாகியுள்ளது. அப்போது சில மாணவர்கள் வகுப்பறையில் தூங்கியதாகக் கூறப்படுகிறது, இதனை சிசிடிவி கேமிரா மூலம் பார்த்த நீட் கோச்சிங் சென்டர் உரிமையாளரும் பயிற்சியாளருமான ஜலாலுதீன், அந்த மாணவர்களை பிரம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த கொடூரமான தாக்குதலில் மாணவர்களுக்கு உடலில் கை, கால், முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. 

மேலும், மாணவர்கள் அவர்களது காலனிகளை பயிற்சி மைய வாசலிலே விட்டுவிட்டு வர வேண்டும். ஆனால் காலனியை முறையாக அடுக்கவில்லை என்பதற்காக, அதனை எடுத்து வந்து வகுப்பறையில் அமர்ந்திருந்த குறிப்பிட்ட மாணவி மீது தூக்கி வீசியுள்ளார். அப்போது அது மற்ற மாணவிகள் மீதும் விழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மிக ஆபாசமாகவும் மாணவ, மாணவிகளை திட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த சிசிடிவி வீடியோக்களை ஆதாரமாக வைத்து, பயிற்சியாளர் ஜலாலுதீன் மீது மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஜலாலுதீன் உட்பட பயிற்சி நிலையத்தில் வேலை பார்ப்பவர்கள் முதல், மாணவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேட்டையன் பட பாணியில், நீட் பயிற்சிக்கு சென்ற மாணவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.