முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம்(84) இன்று காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்ட முரசொலி செல்வத்தின் உடல் சென்னை கோபாலபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வத்தின் உடலைப் பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அஞ்சலி செலுத்த வந்த மூத்த அமைச்சர் துரைமுருகன், முரசொலி செல்வத்தின் உடலை பார்த்ததும் கதறி அழுதார். மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்களான வைகோ, வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு முதலமைச்சருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இதையடுத்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “இன்று காலை எழுந்து பல் துலக்கி காபி குடித்துவிட்டு சிறிது நேரம் உறங்க செல்கிறேன் என்று சொன்னவர் சிற்றுண்டிக்கு எழுப்பும்பொழுது எழவில்லை என முதலமைச்சர் அவர்களே என்னிடம் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் முரசொலியில் வெளிவந்த செய்திக்காக போடப்பட்ட வழக்கில் சட்டமன்றத்தில் கூண்டு செய்து நிறுத்தி கேள்வி கேட்டார்கள். அதற்கு அவர் கூறிய பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் வியக்க வைத்தது. முரசொலி செல்வம் அனைவருக்கும் வேண்டியவர். எதிர்க்கட்சியினரையும் அரவணைத்து செல்பவர். கோபாலபுரத்தில் தீபமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தார். இன்று நம்மையெல்லாம் விட்டு சோகத்தில் ஆழ்த்திச் சென்று விட்டார்.
திராவிடக் கழகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் முரசொலியின் இறப்பு பேரிழப்பாகும். அவரது புகழ் திராவிட இயக்க வரலாற்றில் அழியா புகழோடு நிலைத்து நிற்கும். அண்ணன் முரசொலி செல்வம் மறைந்த தேதியை கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்த தினத்தன்று செல்வி அக்கா , கட்சிக்கு அப்பாற்பட்டு மிகவும் பக்கபலமாக எனக்கு ஆறுதல் தெரிவித்தார்கள். அவரது மறைவு திமுகவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இது மிகப்பெரிய இழப்பு. அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும். தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தழுதழுத்த குரலில் பேசினார்.