Irfan: வெளிநாட்டில் யூடியூபர் இர்ஃபான்... நடவடிக்கை கன்ஃபார்ம்... அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிரடி!
யூடியூபர் இர்ஃபான் மீது காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பரிசோதனை செய்து சர்ச்சையில் சிக்கியவர் யூடியூபர் இர்ஃபான். இந்தியாவில் இது சட்டப்படி குற்றம் என்பதால், வெளிநாடு சென்றிருந்த போது, கருவின் பாலினத்தை டெஸ்ட் செய்து பார்த்தார். இந்த பஞ்சாயத்து ஓயும் முன்பே, தனது குழந்தை பிறப்பை வீடியோவாக எடுத்து யூடியூப், இன்ஸ்டாவில் ஷேர் செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். முக்கியமாக குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியது விஸ்வரூபம் எடுத்தது. ஏற்கனவே இர்ஃபானுக்கு குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்பட்டது.
அதேபோல், தற்போதும் குழந்தை பிறப்பு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இர்ஃபான் விவகாரம் குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார். சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் புதிய 250 KVA மாற்றியை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், Over load இருக்கும் மின்மாற்றிகளை கண்டறிந்து கூடுதல் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையில் 7 இடங்களில் கூடுதல் மின்மாற்றிகள் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இர்ஃபான் விவகாரம் குறித்து பேசிய அவர், சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டு, 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வந்த பிறகு அதற்கான பதில் பெறப்படும். சம்பந்தப்பட்ட யூடியூபர் இர்ஃபான், மருத்துவமனையின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. DMS சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது, அதனால் காவல்துறையினர் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வார்கள். இந்த விவகாரத்தில் காலதாமதம் ஆகவில்லை, துறையின் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அதனை செய்துள்ளோம். இர்பான் மீதும் சட்ட ரீதியான, துறை ரீதியான நடவடிக்கைகள் தொடரும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா பயிற்சி கொடுக்கப்பட்ட பிறகு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிரசவத்தின் போது குழந்தைகள், தாய்மார்கள் உயிரிழப்பது மிகப்பெரிய அளவில் குறைந்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான பிரசவங்கள் சுகப் பிரசவமாக இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு இல்லாத மாவட்டமாக இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களும் இந்த இலக்கை எட்ட மருத்துவர்களை அறிவுறுத்தி வருகிறோம் என்றார்.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் திட்டமிட்டே பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை செய்யப்படுவது குறித்து விளக்கம் கொடுத்தார். அதாவது, அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இதுபோன்று நடப்பதாக சொல்லிவிட முடியாது. அரசு மருத்துவ துறையோடு, தனியார் மருத்துவத்துறையும் இணைந்து கடமை செய்தால்தான் மக்களுக்கான சேவையை செய்ய முடியும். இதுதொடர்பாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் அவரின் தலைவருக்கும் பலமுறை நான் சொல்லி இருக்கிறேன். எந்த மருத்துவமனையில் எந்த மருந்து இல்லை என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். விஜயபாஸ்கர் அவரின் தொகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்யலாம். அவரை யாரும் தடுக்கப்போவது இல்லை.
விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து மருந்துகள் இல்லை என்பதை அவர் நிரூபிக்கலாம். ஆனால் பேட்டி மட்டும் கொடுப்பதில் அர்த்தமில்லை, 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது விஜயபாஸ்கர் எத்தனை மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்தார்? இந்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும், அவர்கள் 10 ஆண்டுகளில் செய்ததையும் ஒப்பீட்டு பார்க்க வேண்டும். நாங்கள் செய்ததில் 10 சதவீதமாவது அவர்கள் செய்திருந்தால் நன்றாக இருக்கும். 37வது எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காதது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மா சுப்பிரமணியன், அங்கு செல்லவில்லை என்பதால், தான் இங்கு கலந்துகொண்டேன், நாங்கள் மக்களோடு இருக்கிறோம் எனக் கூறினார்.
What's Your Reaction?