சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில், செவிலியரைத் தாக்கியதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. மேலும், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாக கூறி, நடராஜ தீட்சிதர் என்பவரை சஸ்பெண்ட் செய்து பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடராஜ தீட்சிதர், இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்திருந்தார். அதனை விசாரித்த கடலூர் இணை ஆணையர், நடராஜ தீட்சிதரின் சஸ்பெண்டை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், பொது தீட்சிதர் குழுவின் முடிவில் தலையிட இந்து அறநிலைத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணை வந்தது. அப்போது நடராஜ தீட்சிதர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் கோயில் தங்களுக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைப்பதாகவும், நீதிமன்றம் தான் இதனை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, தீட்சிதர்களால் தனக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, மன கஷ்டங்களுக்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்கும் அவமானப்படுத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார். தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவதாகவும், இது ஒரு நல்ல அறிகுறி கிடையாது என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருபவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைப்பதாகவும் குறிப்பிட்டார். சிதம்பரம் நடராஜர் கோயில் நமக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைப்பதாகவும், அவர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என கருதுவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டுமே நடத்துப்பட்டு வந்த ஆரூத்ரா தரிசனம், தற்போது பல கோயில்களில் நடத்தப்படுவதாகவும், சிதம்பரம் கோயில் ஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தகர்கள் கூட்டம் வருவதில்லை எனவும் அவர் கூறினார். இப்படியே இருந்தால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோயில் பாழாகி விடும் எனவும் கோயிலில் காசு போட்டால் தான் பூ கிடைக்கும் என்றும், இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காதும் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். இதனையடுத்து, இந்த வழக்கில் பதிலளிக்குமாறு இந்து அறநிலைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு (அக்.21) ஒத்திவைத்தார்.