வயநாட்டில் வெற்றி பெற போவது யார்..? அனல் பறக்கும் தேர்தல் களம்.. பிரியங்கா காந்தி முன்னிலை
வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.
ஒரு நபர் இரண்டு தொகுதிகளில் எம்.பி பதவி வகிக்க முடியாது என்பதால் வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் மகராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியுடன் நாட்டில் காலியாக உள்ள மற்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது. தொடர்ந்து, வயநாடுக்கு நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸின் செல்வாக்கு மிக்க வயநாடு தொகுதியை தக்க வைக்கும் நோக்கில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை அத்தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நவம்பர் 13-ஆம் தேதி ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அஸ்ஸாமில் 5, பீகாரில் 4, கர்நாடகாவில் 3, மத்தியப்பிரதேசம், சிக்கிமில் தலா 2, கேரளம், சத்தீஸ்கர், மேகாலயம், குஜராத்தில் தலா ஒரு தொகுதி என 33 பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வயநாடு தொகுதியில் காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி 48,895 வாக்குகளும், பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் 27,921 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
1999-ஆம் ஆண்டு அமேதியில் பாஜக வேட்பாளர் அருண் நேருவுக்கு எதிராக தனது தாயார் சோனியா காந்தி போட்டியிட்ட போது அவருக்கு அதரவாக பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து, அவர் அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் முறையாக வயநாட்டில் போட்டியிட்டு முன்னேறி வருவது தொண்டர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?