'நாட்டு நாட்டு..' பாடல் பின்னணியில் தெறிக்க விடும் கமலா ஹாரிஸ்.. பட்டைய கிளப்பும் பிரசார வீடியோ!
கமலா ஹாரிஸ் கெத்தாக நடந்து வருவது, பிரசார பொதுக்கூட்டத்தில் மக்களை பார்த்து கையசைப்பது, கூட்டத்தினர் மத்தியில் உரையாற்றுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்ப்பும் வரும் 10ம் தேதி நேரடி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர். இதற்கு முன்பாக தொடர் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சி காலத்தில் செய்த தவறுகளை பட்டியலிட்டு கமலா ஹாரிஸ் பேசி வருகிறார்.
மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும், அனைவருக்கும் குறைந்த விலையில் மருத்துவ சேவைகள் கிடைக்கும்; மலிவு விலை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற வாக்குறுதிகளையும் அவர் கொடுக்க தவறவில்லை. இந்நிலையில், கமலா ஹாரிஸின் பிரசார வீடியோ பாடல் ஒன்று வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு..' பாடல் கேட்பவர்கள் அனைவரையும் ஆட்டம் போட வைக்கும். உலகளவில் பிரசித்தி பெற்ற இந்த பாடல் ஆஸ்கர் விருதையும் தட்டித் தூக்கியது. தமிழில் 'நாட்டு நாட்டு..' எனத்தொடங்கும் பாடல் இந்தி வெர்ஷனில் 'நாச்சோ நாச்சோ' (Nacho Nacho) எனத் தொடங்கும்.
இந்த 'நாச்சோ நாச்சோ' பாடலை பின்னணியாக கொண்டு கமலா ஹாரிஸின் பிரசார வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது 'நாச்சோ நாச்சோ' பாடலில் உள்ள ஒரிஜினல் வரிகளுக்கு பதிலாக இதில் கமலா ஹாரிஸின் புகழ்பாடும் வரிகள் இடம்பெற்றுள்ளன. பாலிவுட் பாடகி ஷிவானி காஷ்யப் கமலா ஹாரிஸின் புகழ்பாடும் 'நாச்சோ நாச்சோ' பாடலை பாடியுள்ளார்.
'நாச்சோ நாச்சோ' பாடலின் பின்னணியில் சுமார் 1.23 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் கமலா ஹாரிஸ் கெத்தாக நடந்து வருவது, பிரசார பொதுக்கூட்டத்தில் மக்களை பார்த்து கையசைப்பது, கூட்டத்தினர் மத்தியில் உரையாற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் வீடியோவில் தோன்றும் பலர்
இந்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, குஜராத்தி, பெங்காலி மற்றும் பல இந்திய மொழிகளில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவிப்பதுபோலவும் காட்சிகள் உள்ளன.
அமெரிக்காவில் 4.4 மில்லியன் இந்திய வம்சாவளியினர் மற்றும் 6 மில்லியன் தெற்காசிய மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களை குறிவைத்து கமலா ஹாரிஸின் ஸ்பெஷல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய-அமெரிக்க சமூகத் தலைவர் அஜய் பூடோரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் தேர்தல் காலங்களில் வாக்காளர்களை கவர்வதற்காக அரசியல் தலைவர்கள் இதுபோன்று வீடியோவை வெளியிடுவது வழக்கம். தற்போது கமலா ஹாரிஸும் அதே பாணியை பின்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?