Indian2 Box Office: ரசிகர்களை கதறவிட்ட இந்தியன் தாத்தா... பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தடுமாறும் இந்தியன் 2

Indian 2 Day 1 Box Office Collection : கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இதனால் இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jul 13, 2024 - 07:15
Jul 13, 2024 - 10:14
 0
Indian2 Box Office: ரசிகர்களை கதறவிட்ட இந்தியன் தாத்தா... பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தடுமாறும் இந்தியன் 2
Indian 2 Day 1 Box Office Collection

சென்னை: இந்தியன் 2 திரைப்படம் மூலம் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நேற்று வெளியான இந்தியன் 2, ரசிகர்களை உண்மையாகவே கதற விட்டுள்ளதாக தெரிகிறது. உலக நாயகன் கமல், சித்தார்த், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. அதேபோல் ஏஆர் ரஹ்மானை விட்டுவிட்டு முதன்முறையாக அனிருத்துடன் கூட்டணி வைத்தார் ஷங்கர். 

இந்தியன் 2 ரிலீஸாகும் முன்பே, இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. ட்ரெய்லர் முழுவதும் லஞ்சம், ஊழல் என பாடிய பாட்டையே ஷங்கர் திரும்பவும் பாடி வைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அது உண்மை தான் நேற்று படம் வெளியானதும் உறுதியாகிவிட்டது. 1996ம் ஆண்டு கமல், ஷங்கர், ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் வெளியான இந்தியன், அனைத்து வகையிலும் மாஸ் காட்டியது. கமலின் நடிப்பு, கெட்டப், ஏஆர் ரஹ்மானின் பாடல்கள், பிஜிஎம், ஷங்கரின் மேக்கிங், சுஜாதாவின் வசனம் ஆகியவை பட்டையை கிளப்பின. 

ஆனால், தற்போது ரிலீஸாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் அதற்கு நேர் எதிராக நெகட்டிவான விமர்சனங்களை சந்தித்துள்ளன. இந்தியன் 2-வில் ஏஆர் ரஹ்மானின் பழைய பின்னணி இசையை தேவையான இடங்களில் பயன்படுத்தியுள்ளார் ஷங்கர். அனிருத்தின் இசையை விட ஏஆர் ரஹ்மானின் பிஜிஎம் வரும் இடங்களில் தான் ரசிகர்கள் கூஸ்பம்ஸ் ஆகின்றனர். அதேபோல் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஃபார்வேர்ட் மெசேஜ்களை தொகுத்து, இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கியுள்ளதாகவும் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கியுள்ளனர். கதை, திரைக்கதை எதுவும் இல்லாமல் தேவையில்லாத பிரம்மாண்டத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் ஷங்கர் ஏமாற்றிவிட்டதாகவும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

படம் முழுக்க ஊழலை பற்றி பேசும் ஷங்கர், இந்தியன் இரண்டம் பாகமே மிகப் பெரிய ஊழல் தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். டிக்கெட் எடுத்து தியேட்டர் வரும் ரசிகர்களை இப்படியெல்லாம் ஏமாற்றி ஊழல் செய்யக் கூடாது எனவும் அவர்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். விழுந்து விழுந்து ப்ரோமோஷன் செய்தும் நல்ல கதையும் திரைக்கதையும் இல்லையென்றால் இதுதான் நடக்கும் எனவும் இந்தியன் 2 படத்தை விமர்சித்துள்ளனர். முதல் காட்சி முடிந்ததுமே இந்தியன் 2 படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் வெளியாகிவிட்டன. இதனால் அடுத்தடுத்த காட்சிகளுக்கு ரசிகர்களிடம் பெரிய ஆர்வம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அட்வான்ஸ் புக்கிங்கில் 20 முதல் 25 கோடி வரை கலெக்ஷன் செய்திருந்தது இந்தியன் 2. இதனால் முதல் நாள் வசூல் (Indian 2 Day 1 Box Office Collection) தரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் நாளில் 50 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 20 கோடி என சொல்லப்படுகிறது. கமல், ஷங்கர், அனிருத் என பிரம்மாண்ட கூட்டணியில் உருவான இந்தியன் 2, முதல் நாளில் 50 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்தியன் 2 திரைப்படம் முதல் மூன்று நாட்களில் 200 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow