மருத்துவ படிப்பில் சேர இப்படி ஒரு நாடகமா..? 46 பேர் மீது புகார்
என்.ஆர்.ஐ இட ஒதுக்கீட்டில் சேருவதற்காக போலி தூதரக சான்றிதழ்களை சமர்பித்த 46 மருத்துவர்கள் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி, எம்.எஸ், டி.என்.பி ஆகிய படிப்புகளில் முதுகலை மருத்துவப்படிப்பில் இரண்டாயிரத்து 294 இடங்கள் மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக் குழுவின் மூலம் நிரப்பப்படுகிறது. அவற்றில் ஆயிரத்து 94 இடங்கள் மருத்துவத்துறையில் அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள 50 சதவீதம் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு, அரசுப் பணியில் இல்லாதவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 12 ஆயிரத்து 423 மருத்துவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில், 2024-25-ஆம் கல்வியாண்டில் என்.ஆர்.ஐ இட ஒதுக்கீட்டில் உள்ள 89 இடங்களில் சேர்வதற்கு 446 மருத்துவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பம் செய்த 446 பேரில் 223 மருத்துவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து, விண்ணப்பத்தில் சான்றிதழ்கள் முழுமையாக சமர்பிக்காத 221 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதுகலை மருத்துவப்படிப்பில் என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டில் சேர்வதற்கு போலியாக தூதரக சான்றிதழ்களை சமர்பித்த 46 மருத்துவர்கள் மீது காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 46 மருத்துவர்கள் போலியாக தூதரக சான்றிதழ்களை அளித்துள்ளதை தூதரகங்கள் உறுதி செய்துள்ள நிலையில் மருத்துவர்களின் விபரங்களுடன் தூதரகத்தில் பெறப்பட்ட போலி சான்றிதழ்களும் இணைக்கப்பட்டு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புகாரளித்ததாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.
What's Your Reaction?