”அடுத்த ஜென்மத்திலும் காவல் உடையை அணிய விரும்புகிறேன்” - கண் கலங்கிய டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன்

DGP AK Viswanathan IPS Emotional Speech at Retirement Ceremony : இன்று தான் காக்கி உடை அணியும் கடைசி நாள் என்று நினைக்கும் போது கண்கலங்கிறது எனவும், அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் மீண்டும் காவல் உடையை அணிய விரும்புகிறேன் எனவும் பிரிவு உபச்சார விழாவில் டிஜிபி ஏகே விஸ்வநாதன் உருக்கமாக தெரிவித்தார்.

Aug 1, 2024 - 08:50
Aug 2, 2024 - 10:21
 0
”அடுத்த ஜென்மத்திலும் காவல் உடையை அணிய விரும்புகிறேன்” - கண் கலங்கிய டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன்
DGP AK Viswanathan IPS Emotional Speech at Retirement Ceremony

DGP AK Viswanathan IPS Emotional Speech at Retirement Ceremony : 1990 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான ஏ.கே விஸ்வநாதன் [A.K.Viswanathan] தமிழக காவல்துறையில் பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார். 34 ஆண்டுகாலமாக தமிழக காவல்துறையில் பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன் நேற்று புதன்கிழமை பணி நிறைவு பெற்றார். தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் டிஜிபியாக உள்ள ஏ.கே. விஸ்வநாதன் ஓய்வு பெற்றதை ஒட்டி, இன்று அவருக்கான பிரிவு உபச்சார விழாவானது எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண், ஏடிஜிபிக்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும், ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அதிவிரைவு படை, கமாண்டோ படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த வாகனத்தில் சென்று டிஜிபி ஏ.கே விஸ்வநாதன் ஏற்று கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சென்னை காவல் ஆணையர் அருண், "20 ஆண்டுகளாக சென்னை காவல் துறையில் பணியாற்றி இருப்பதாகவும், அவ்வாறு சென்னையில் பணியாற்றும்போது தனது ஏழாவது காவல் ஆணையராக ஏ.கே. விஸ்வநாதன் இருந்ததாகவும், அவரின் கீழ் பணியாற்றியது நல்ல அனுபவத்தை கொடுத்ததாகவும் சிரித்த முகத்துடன் வரவேற்று எளிமையாக பழகக் கூடியவர் எனவும், கொரோனா காலத்தில் காவல்துறையை சிறப்பாக வழி நடத்தியதாகவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி இறப்பின் போது தகுந்த பாதுகாப்பை வழங்க ஏற்பாடு செய்தவர்" எனவும் அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் [Shankar Jiwal], "இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள காவல்துறை அதிகாரிகள், விருந்தினர்களை பார்க்கும் போது ஏ.கே.விஸ்வநாதன் தமிழக காவல்துறையில் எந்த அளவுக்கு நன்மதிப்பை பெற்றுள்ளார் என்பது தெரிகிறது. சில அதிகாரிகள் தேர்ச்சி பெற்று பணிக்கு வந்து விடுவார்கள்.

ஆனால் ஏ.கே.விஸ்வநாதன் அது போல அல்ல. 3 தலைமுறையாக அவரது காவல்துறை பணியாற்றி வருகின்றனர். அவர் காவல்துறையில் பணிக்கு வர வேண்டும் என்ற எண்ணமாக இருந்தது. அவர் எங்கு வேலை பார்த்தாலும் மகிழ்ச்சியோடு பணியாற்றுபவர். சிலர் மகிழ்ச்சியோடு பணியாற்றுவதை தவறு விட்டு விடுகின்றனர். இன்னும் ஒரு ஆண்டு பொறுத்து இருங்கள். நானும் வந்து இணைகிறேன்” என்று தான் ஓய்வு பெற உள்ளதை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். 

பின்னர் மேடையில் பேசிய டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், “34 ஆண்டுகளாக பேர் தெரியும் வகையில் தமிழக காவல்துறையில் பணியாற்றி உள்ளேன். தனது தாத்தா, தந்தைக்குப் பிறகு மூன்றாவது தலைமுறையாக தமிழக காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெறுவதை பெருமை கொள்கிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த மனைவி மற்றும் மகள் காவல்துறையினர் என அனைவருக்கும் நன்றி.

தான் பணிபுரிந்த காவல்துறையில் எந்த பதவி கொடுத்தாலும் அதில் என்ன திட்டங்கள் புதிதாக நடைமுறைக்கு கொண்டு வரலாம் என நினைத்து பணியாற்றினேன். எந்த பதவியையும் குறைத்துப் பார்த்ததில்லை. துன்பத்தோடு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு, அவர்களது பிரச்சனையை சரிசெய்த பின்பு அவர்களது முகத்தில் புன்னகை கிடைக்க உதவுவதை தான் நமக்கு கிடைத்த பெருமை. இன்றுதான் நான் காக்கி உடை அணியும் கடைசி நாள் என்பதால் கண் கலங்குகிறது. அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் மீண்டும் காவல் உடையை அணியவே விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow