பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? - மருத்துவர் விளக்கம்

பெண்ணுறுப்பின் சுகாதாரம் பேணுவது மிகவும் அத்தியாவசியம். பெண்ணுறுப்பை எந்தெந்த வகையிலெல்லாம் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள முடியும் என்பது பற்றிப் பார்க்கலாம்.

Sep 10, 2024 - 19:13
 0
பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? - மருத்துவர் விளக்கம்
vaginal hygine

இன்றைக்கு பெண்களின் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பரவலாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மிகவும் சென்சிட்டிவான அவர்களது பிறப்புறுப்பை கிருமித் தொற்றுகள் ஏற்படாதபடி மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு இன்று அதிகரித்து வருகிறது. பெண்ணுறுப்பை சுத்தப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் ‘வி வாஷ்’ போன்ற க்ளென்சர்களின் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காண முடியும். இது பாதுகாப்பானதுதானா? என்றும், பிறப்புறுப்பை எப்படித் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் உமா மகேஸ்வரி... 

“பிறப்புறுப்பை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்காக விற்கப்படுகிற வி வாஷ்’ போன்ற ரசாயனங்களால் தயாரிக்கப்பட்டவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால் அதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. எனவே ‘வி வாஷ்’ போன்ற உடனடித் தீர்வுகளைத் தேர்ந்தெடுக்காமல் நிரந்தரமான தீர்வை நோக்கித்தான் நகர வேண்டும். நமது வாழ்வியல் முறையில் ஏற்படுத்தும் மாற்றம் முக்கியமானது. பிறப்புறுப்புப் பகுதிகளில் ஏற்படும் நோய்த்தொற்றுக்குக் காரணமே நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்திருப்பதுதான். நமது முறைப்படுத்தப்பட்ட வாழ்வியல் வழியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அமிலம் - காரம் இரண்டையும் சமநிலையில் வைத்துக் கொள்ளும்படியான, நமது மண்ணுக்கு ஏற்ற சத்துள்ள உணவுகளை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உடலுழைப்பு இல்லாத சூழலும் ஆபத்தானது.

ஆடைக்கலாச்சாரம் என்கிற சொல்லுக்குப் பின்னே பல சர்ச்சைகள் இருக்கின்றன. ஜீன்ஸ், சுடிதார் அணிவதையெல்லாம் பெண்களின் தனிப்பட்ட உரிமை சார்ந்தது என்பதை மறுக்கவில்லை. ஆனால் அது நமது தட்ப வெப்ப சூழ்நிலைக்கு உகந்ததா? எனவும் பார்க்க வேண்டும். நமது பாரம்பரிய உடைகளான புடவை மற்றும் பாவாடை தாவணி போன்ற ஆடைகள் மிகவும் காற்றோட்டமானவை. சுடிதார், ஜீன்ஸ் போன்றவை பிறப்புறுப்புக்கான காற்றோட்டத்தை தடை செய்கின்றன. உள்ளாடைகளை எல்லா நேரமும் அணிய வேண்டிய அவசியம் இல்லை. பயன்படுத்திய உள்ளாடைகளை டெட்டால் போட்டுத் துவைப்பதை விட வெயிலில் காய வைப்பது மிகவும் அவசியமானது. காட்டன் புடவைகள் உடுத்தலாம், வாய்ப்பில்லாத சூழலில் சுடிதார், பேண்ட் ஆகியவற்றை காட்டனில் அணியலாம். வீட்டில் இருக்கும் நேரங்களில் உள்ளாடைகளைக் கழற்றி விட்டு பாவாடை போன்ற காற்றோட்டமுள்ள உடையை உடுத்திக் கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலம் நாம் பல பிரச்னைகளிலிருந்து தப்ப முடியும் என்பதால் அதுதான் அடிப்படையானது. இயற்கையாகவே பிறப்புறுப்பு பகுதியில் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. முறையான வாழ்க்கை முறையைப் பின்பற்றும்போது அதுவே போதுமானதாக இருக்கும். வி வாஷ் போன்றவற்றை பயன்படுத்த அவசியமிருக்காது. என்னால் வாழ்வியல் முறைகளையெல்லாம் மாற்ற முடியாது என்கிறவர்கள் வி வாஷ் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கழிப்பறைகளை எவ்விதம் பயன்படுத்த வேண்டும், எவ்விதம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு இந்தியாவில் மிகவும் குறைவாகவே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால்தான் சுகாதாரமற்ற கழிப்பறைகளை பயன்படுத்துவதால் சிறுநீர் பாதைகளில் கிருமித் தொற்று ஏற்படுகிறது. நமது நாட்டில் பெரும்பாலும் பாதுகாப்பற்ற கழிப்பறைகள்தான் இருக்கின்றன. இந்த இடத்தில் தனி மனித மாற்றம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சமூக மாற்றமும் தேவைப்படுகிறது.” என்கிறார் உமா மகேஸ்வரி. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow