18 வயதே ஆன பட்டியல் சமூக இளம்பெண் +2 முடித்து மேற்படிப்பிற்கு பணம் இல்லாததால் பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் தங்கி வேலை செய்துள்ளார். மேற்படிப்பிற்கு பணம் இல்லாததாலும், வறுமையினாலும், வீட்டின் சூழ்நிலையினாலும் வீட்டு வேலை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணை எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகனான ஆண்டோ மதிவாணன் படிக்க வைப்பதாகவும் கூறியதால் இடைத்தரகர் மூலம் சென்றுள்ளார்.
இதனையடுத்து, திருவான்மியூர், தெற்கு அவென்யூவில் வசித்த, திமுக எம்.எல்.ஏ.வின் மகனான ஆண்டோ மதிவாணன் அவரது மனைவி மெர்லினாவும் சம்பந்தப்பட்ட பெண்ணை வேலை வாங்குவதாக நினைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். சித்திரவதை செய்ததோடு மட்டும் இல்லாமல் உடம்பில் பல இடங்களில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பெண் வலிதாங்காமலும், வீட்டு வேலை அதிகமாக தரப்பட்டதாலும் தன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறிய நிலையில் மதிவாணனும், மெர்லினாவும் அனுப்ப மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து வீட்டில் சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவோம் எனவும் எங்களை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற நிலையில் பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளார். உடம்பில் சூடு, கன்னத்தில் காயத்தை பார்த்து பெண்ணின் தாய் கதறி அழுதுள்ளார் அதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பலமாத காலமாக அந்த பெண்ணிற்கு எந்தவித ஊதியமும் தரப்படவில்லை என்றும் காலையில் இருந்து இரவு வரை வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதோடு உணவும் சரியாக தரப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அப்பெண் கதறி அழுது பேட்டி கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்கலில் வைரலானது.
இந்த விவகாரம் தொடர்பாக மதிவாணன் மீதும், மெர்லினா மீதும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இருவர் மீதும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில், வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில், பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தது.
இந்த வழக்கில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரின் மனைவி மார்லினா ஆன்டோ ஆகியோருக்கு எதிராக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கை நகல்களும் வழங்கப்பட்டன. இந்த நிலையில் வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக இருவரும் நீதிபதி அல்லி முன்பாக நேரில் ஆஜராகினர்.
இருவர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி அல்லி வாசித்து விளக்கினார். அதற்கு தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று இருவரும் பதிலளித்தனர். இதையடுத்து இருவர் மீதும் குற்றச்சாட்டுக்களை பதிவை செய்த நீதிபதி, சாட்சி விசாரணைக்காக வழக்கின் விசாரணையை செப்டம்பர் 24ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.