500 மீட்டர் கூட ஓட முடியவில்லை.. போதைப்பொருள் புழக்கமே காரணம் - ஆளுநர் ரவி

போதைப்பொருள் புழக்கத்தால் பஞ்சாப் மாநில இளைஞர்கள் உடல் தகுதியை இழந்து விட்டார்கள். 500 மீட்டர் கூட அவர்களால் ஓட முடியவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Oct 7, 2024 - 03:01
Oct 7, 2024 - 03:06
 0
500 மீட்டர் கூட ஓட முடியவில்லை.. போதைப்பொருள் புழக்கமே காரணம் - ஆளுநர் ரவி
போதைப்பொருள் புழக்கத்தால் இளைஞர்கள் உடல் தகுதியை இழந்து விட்டார்கள் - ஆர்.என்.ரவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி தாளாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "போதையை ஒழித்து நாம் வெற்றி பெற வேண்டும். 40 ஆண்டுகளுக்கு முன்னால் அனைத்து துறைகளிலும் பஞ்சாப் மாநிலம் முதன்மையாக இருந்தது. தற்போது போதை புழக்கத்தால் மிக மோசமான நிலையை சந்தித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.

போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் திருட்டு உள்ளிட்ட விரும்பதகாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். தமிழகம் போதை பழக்கத்தால் மிகவும் பாதிப்படைந்த மாநிலமாக மாறி வருகிறது. தமிழகத்தில் போதைப் பொருளான கஞ்சா, அதிக அளவு புழக்கத்தில் உள்ளது. ஆந்திரா, கேரளா மாநிலங்களில் ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடக்கிறது. விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் நூற்றுக்கணக்கான கிலோ செயற்கை ரசாயன போதைப் பொருட்கள் பிடிபடுகிறது.

தமிழகத்தில் ஆளுநராக நான் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் அதிக அளவு கஞ்சா பிடிக்கப்பட்டதாகவே தகவல்கள் உள்ளது. மத்திய அரசின் ஏஜென்சிகள் கஞ்சா அல்லாத பிற ரசாயன போதை பொருட்களை தமிழகத்தில் அதிகளவு பறிமுதல் செய்து வருகின்றனர். தமிழக காவல்துறையால் ஒரு கிராம் அளவு கூட கஞ்சா தவிர்த்த பிற ரசாயன போதை பொருட்கள் பிடிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை.

போதைப் பொருட்களின் கிடங்குகளாக பாகிஸ்தான், தமிழகம் மற்றும் துபாய் போன்ற பகுதிகள் செயல்படுகிறது. சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் போதைப் பொருட்கள் விற்பனையை நடத்தி வருகின்றனர். போதைப் பொருள் விற்பனை என்பது தீவிரவாதம். இந்தியாவில் போதைப்பொருள் தீவிரவாதத்தை ஊக்குவிக்க சர்வதேச ஏஜென்சிகள் நினைக்கிறார்கள்.

சென்னையின் பல பகுதிகளில் உள்ள பெற்றோர்கள் போதை பொருட்கள் தொடர்பான புகார்களை என்னிடம் தெரிவித்து வருகின்றனர். ரசாயன போதை பொருட்களின் புழக்கம் பெருமளவு அதிகரித்துள்ளது.அரசினால் மட்டுமே போதை பொருள் ஒழிப்பது என்பது சாத்தியமல்ல. அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்தால் மட்டுமே போதை ஒழிப்பு சாத்தியமாகும்.

இந்திய ராணுவத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் இருந்தார்கள். தற்போது பஞ்சாப் இளைஞர்கள் ராணுவத்தில் நுழைவதற்கு கூட உடல்தகுதி உள்ளிட்டவைகள்  இல்லாமல் இருக்கிறார்கள். போதை பொருட்களை அதிகளவு பயன்படுத்துவதால். பஞ்சாப் மாநில இளைஞர்கள் உடல் தகுதியை இழந்து விட்டார்கள். 500 மீட்டர் கூட அவர்களால் ஓட முடியவில்லை.

பள்ளி கல்லூரிகளில் போதை பொருட்கள் தொடர்பான கண்காணிப்பை அதன் நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு போதைப் பொருட்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல கல்வி நிலையங்களில் போதைப் பொருட்கள் கண்டறியப்பட்டால், பெயர் கெட்டுவிடுமோ என நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கிறார்கள்.

மாணவர்கள் போதை பொருள் கொள்வது தெரியவந்தால் கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் அதனை பெற்றோர்கள் ஏற்க மறுக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என உறுதியாக தெரிவிக்கிறார்கள். போதை பொருட்கள் விவகாரத்தை கல்வி நிறுவனங்கள் தலையாயப் பிரச்சனையாக கருதி கண்காணிப்பை தீவிரப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

குழந்தைகளுடன் நேரம் செலவு செய்வதை பெற்றோர்கள் அதிகரிக்க வேண்டும். ஒரே அறையில் இருந்தாலும் கூட பெற்றோர்களும் குழந்தைகளும் செல்போனில் மூழ்கி விடுகிறார்கள். குழந்தைகளின் முதல் பொறுப்பாளர்கள் பெற்றோர்கள் தான். செல்போன் உள்ளிட்ட சாதனங்களை தவிர்த்து குழந்தைகளுடன் நேரம் செலவு செய்வதை அவசியமாக கட்டாயம் கருதவேண்டும். மாணவர்கள் இளைஞர்கள் போதைப் பொருட்களை தாங்களும் பயன்படுத்தாமல் தங்களை சுற்றியும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow