தமிழ்நாடு

கண்ணீர் வெள்ளத்தில் கோபாலபுரம்... முரசொலி செல்வத்தின் உடல் தகனம்

மறைந்த பத்திரிகையாளர் ‘முரசொலி’ செல்வத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

கண்ணீர் வெள்ளத்தில் கோபாலபுரம்... முரசொலி செல்வத்தின் உடல் தகனம்
முரசொலி செல்வத்தின் உடல் தகனம்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் இன்று காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முரசொலி செல்வம், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று வியாழன் [10-10-24] அன்று உயிரிழந்தார்.

சென்னை கோபாலபுரத்திலுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த முரசொலி செல்வத்தின் உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் துரைமுருகன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, நடிகர்கள் சத்யராஜ், பிரசாந்த், சரத்குமார், ராதிகா சரத்குமார், நடிகர் பிரசாந்த், சத்யராஜ், கவிஞர் வைரமுத்து உள்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தனது மகள் செல்வியின் கணவரான முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் கண் கலங்கினார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரை முருகன், காவ்யா மாறன் ஆகியோர் முரசொலி உடலைப் பார்த்து கண் கலங்கினர்.

இறுதியாக செல்வி, தனது கணவரின் உடலைப் பார்த்து கதறி, கதறி அழுதார். இந்நிலையில், இன்று மாலை முரசொலி செல்வத்தின் உடல் கோபாலபுரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.