மருத்துவர் இல்லாததால் பறிபோன பிஞ்சு உயிர்.. அலட்சியமாக செயல்படும் அரசு
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உரிய சிகிச்சியின்றி நான்கு வயது குழந்தை உயிரிழந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் உப்பேரிகுளம் பகுதியைச் சேர்ந்த சங்கர்-ரோஜா தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இதில், 4 வயதுடைய அவர்களது இரண்டாவது குழந்தை அதே பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு சென்று விட்டு பிற்பகல் வீடு திரும்பியுள்ளது. அப்போது திடீரென அக்குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர் கொடுத்த மாத்திரையை குழந்தைக்கு கொடுத்துள்ளனர். இருந்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது
திடீரென நள்ளிரவு குழந்தைக்கு சுயநினைவின்றி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் அக்குழந்தையை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையெடுத்து உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தையின் உடலானது வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வார காலமாகவே மாநகராட்சியினால் விநியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக வந்ததால் அதை குடித்து குழந்தை உயிரிழந்தா அல்லது அங்கன்வாடியில் உட்கொண்ட உணவில் ஏற்பட்டதா பிரச்சனையா? என்பது ஆய்வின் முடிவிலே தெரியவரும்.
மேலும், உப்பேரிகுளம் பகுதியில் பல நாட்களாக குடிநீர் கலங்கலாக வருவதால் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாகவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து, இப்பகுதியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு குடிநீரை பரிசோதனைக்கு உட்படுத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது மருத்துவர் இல்லாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் தனக்கு தானே கட்டுப்போட்டு கொள்வதும், அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மருத்துவர் இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தமிழக அரசு உரிய தீர்வு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
What's Your Reaction?