தட்டுத் தடுமாறி நடக்கும் சச்சினின் நண்பன்.. ‘தயவுசெய்து உதவுங்கள்’ என ரசிகர்கள் கோரிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சச்சின் டெண்டுல்கரின் நண்பருமான வினோத் காம்ப்ளிக்கு உதவுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Aug 6, 2024 - 18:32
Aug 6, 2024 - 22:03
 0
தட்டுத் தடுமாறி நடக்கும் சச்சினின் நண்பன்.. ‘தயவுசெய்து உதவுங்கள்’ என ரசிகர்கள் கோரிக்கை
தட்டுத் தடுமாறி நடக்கும் வினோத் காம்ப்ளி

இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு நிகர யாருமில்லை என்பது உண்மை தான். ஆனால், ஒரு காலத்தில், சச்சினுக்கு நிகராக பேசப்பட்ட ஒருவர் உண்டு என்றால், அந்த நபரும் ஒரு ஜாம்பவனாக தான் இருக்க வேண்டும். ஆனால், காலத்தின் விளையாட்டு, ஜாம்பவனாக திகழ வேண்டிய ஒருவர், தனது நிலை தடுமாறி, கால்கள் இடர நடை தடுமாறுவது என்பது கொடுமை தான்.

ஆமாம், சச்சினுக்கு இணையாக புகழப்பட்டவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. 1988ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரோடு இணைந்து 664 ரன்கள் அடித்து அந்த அடி, கிரிக்கெட் உலகிற்கு இரண்டு உத்வேகமிக்க இளைஞர்களை அறிமுகப்படுத்தியது.

அதன் பின்னர், டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிய வினோத் காம்ப்ளி. அறிமுகமாக முதல் 7 போட்டிகளிலேயே, 2 இரட்டை சதங்கள், இரண்டு சதங்கள் என அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுழற்பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் வினோத் காம்ப்ளி. ஒரு முறை ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஷேன் வார்னேவின் ஓவரில் 22 ரன்களை விளாசினார்.

1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்கமாட்டார்கள். புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன்கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்த அரையிறுதிப் போட்டியில், முதலில் ஆடிய இலங்கை அணி 251 ரன்கள் எடுத்தது. அப்போதைய இந்திய அணியில், அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், வினோத் காம்ப்ளி, அஜய் ஜடேஜா என மலை போன்ற வீரர்கள் இருந்ததால், எளிதில் வென்றுவிடலாம் என நினைத்தனர்.

ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் மொத்த பேரும் சொதப்பினர். ஒரு கட்டத்தில் 120/8 என்கிற ஸ்கோரில் தத்தளித்தது இந்திய அணி. அப்போது கொல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் சில ரசிகர்கள் செய்த கலாட்டா காரணமாக போட்டியை மேற்கொண்டு தொடர முடியாது போனது. இதனால், இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணி தொடரில் இருந்து வெளியேற்ற பட்டது.

கடைசி பதினெட்டு ஓவர்கள் மிச்சம் இருந்த நிலையில் 130 ரன் தேவை என்றிருந்த நிலையில், அப்போது, காம்ப்ளியும் கும்ப்ளேவும் களத்தில் நின்றிருந்தனர். இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டதும், வினோத் காம்ப்ளி அழுது கொண்டே வெளியேறியதை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்கமாட்டார்கள்.

இவ்வாறு போய்க்கொண்டிருந்த வினோத் காம்ப்ளியின் கிரிக்கெட் வாழ்க்கை, தவறான நடத்தை, ஒழுங்கீனமான அணுகுமுறை, குடிப்பழக்கம் போன்றவற்றால் சீரழிந்தது. பிறகு அணியில் இருந்து வெளியேற்றப்படுவதும், சேர்க்கப்படுவதுமாக அவரது மொத்த கேரியர் மோசமானது மட்டுமல்லாமல், அவரது திறமையும் வீணடிக்கப்பட்டது.

மொத்தமாக 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவரின் ஆவரேஜ் 54.20. இன்றுவரை டெஸ்ட்டில் அதிக ஆவரேஜ் வைத்திருக்கும் இந்திய பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளிதான். அதேபோல் 14 இன்னிங்ஸ்களில் முதல் 1,000 ரன்களைக் கடந்தவர் என்கிற சாதனையும் அவரிடம்தான் இருக்கிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வினோத் காம்ப்ளியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. தற்போது வினோத் காம்ப்ளி நிற்க கூட முடியாமல், கால்கள் வளைந்து வலுவிழந்து, மற்றவர்கள் கைத்தாங்கலாக அழைத்து செல்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவருக்கு சச்சின் டெண்டுல்கர் உதவ வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரசிகர் ஒருவர் சச்சினின் பதிவு ஒன்றிற்கு அளித்துள்ள பின்னூட்டத்தில், “வினோத் காம்ப்ளியின் மோசமான நிலையைப் பாருங்கள். மது மற்றும் அதிக ஈகோ என்ன செய்யும் என்பதை பாருங்கள் ஆனால் சச்சின் டெண்டுல்கர் அவரைக் காப்பாற்ற முன்வந்து வினோத் காம்ப்ளிக்கு மறுவாழ்வு அளிக்க முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வீடியோ இங்கே:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow