கோவையில் லாட்டரி மார்டின் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதலே சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல விசிகவின் துணை பொதுச்செயலாளரும் லாட்டரி மார்டினின் மருமகனுமான ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறையினர் இன்று (நவ. 14) காலை முதலே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடைபெறுகிறது. இந்நிலையில் சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (FEMA) மற்றும் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) விதிமுறைகளை மீறியது தொடர்பாக சென்னை உள்ளிட்ட இடங்களில் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த நிறுவனம் வெளிநாட்டில் நிறுவனத்தின் இருந்து பெறப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் பெற்று கோடிக்கணக்கான ரூபாய் அளவில், விதிகளை மீறி வெளிநாட்டு பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட விரோத பணப்பரி மாற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட விவகாரங்களுக்கு பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் மின் உற்பத்தி விவகாரத்திலும் விதிகளை மீறி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு நாட்கள் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்துள்ளது. அதன்படி ரூ.8.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர்களுக்கு சம்மன் அனுப்பி அடுத்த கட்டமாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.