தமிழ்நாடு

சம்பளத்தில் கை வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்.. ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி

Govt Elementary School Teacher Salary Deduction : காலையில் நிர்வாகிகளிடம் இணக்கமாக பேசி போராட்டத்தை தள்ளி வைத்த நிலையில், மாலையில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சம்பளத்தில் கை வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்.. ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி
போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடிக்க உத்தரவு

Govt Elementary School Teacher Salary Deduction : தொடக்கக் கல்வித் துறையை சேர்ந்த ஆசிரியர்கள் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் அறிவித்த நிலையில், அவர்களுடன் நேற்று திங்கட்கிழமை [23-09-24] காலையில் தலைமைச் செயலகத்தில் பேசி போராட்டத்தை தள்ளி வைக்க அமைச்சர் அன்பில் நடவடிக்கை எடுத்தார்.

மாலையில் இதே கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய அதே தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்ய தொடக்கக் கல்வித் துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது, ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடக்கக் கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடிய இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 31 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த டிட்டோ ஜாக் அமைப்பு தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக வரக்கூடிய 30ஆம் தேதி மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. இந்த நிலையில் 12 ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம், நேற்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அன்பில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் காரணமாக போராட்டத்தை தள்ளி வைப்பதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

மாலையில் இதே ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலான அறிவிப்பு வெளியானது. கூகுள் மீட்டில் பேசிய தொடக்கக்கல்வி இயக்குனர், கடந்த 10ஆம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

காலையில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நன்றாக நடைபெற்ற நிலையில், மாலையில் இப்படி சம்பளம் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அமைச்சரின் இந்த நடவடிக்கை, ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.