பத்து அமாவாசை பொறுத்துக் கொள்ளுங்கள்... அப்புறம் பாருங்கள்... திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி
பத்து அமாவாசை முடிந்த பிறகு மதுரை மீனாட்சி அருள் ஆசியுடன் மீண்டும் எடப்பாடி ஆட்சி அமைப்பார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வருகிற புதன்கிழமை நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை தெப்பகுளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "இன்றைக்கு மாபெரும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக, திமுகவா என்கின்ற போரில் தர்மத்தின் பக்கத்தில் பஞ்சபாண்டவர்கள் போல் நியாயத்தின் பக்கத்தில் எடப்பாடி, துரியோதனன் போல் ஸ்டாலினும் அவருடன் கூட்டணி கட்சியினர் உள்ளனர்.
ஊழலின் மொத்த உருவம் கருணாநிதி தான் என பிரதமர் இந்திரா காந்தி சர்க்காரியார் நீதிபதியை வைத்து நிரவித்தார். 1962இல் அண்ணாவின் ஆட்சிக்கு வந்தபோது வாடகை சைக்கிளில் கூட வர முடியாமல் இருந்த திமுகவினர், கலைஞர் 1969இல் ஆட்சிக்கு வந்த பிறகு இன்றைக்கு லஞ்ச லாவண்யத்தின் மூலம் சொத்து சேர்த்துள்ளனர்.
ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாததால் மகன் உதயநிதியை துணை முதல்வராக ஆக்கியிருக்கிறார். மிட்டா மிராஸ்தாரர் போல திமுகவில் உள்ள துரைமுருகன் முதல் மூத்த தலைவர்கள் வரை எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என கூறவைத்து உதயநிதியை இன்றைக்கு துணை முதல்வராக்கி அவருக்கு பட்டம் சூட்டி இருக்கிறார்கள்.
கொல்லைப்புறம் வழியாக எம்ஜிஆரின் தயவால் இன்றைக்கு ஆட்சியை பிடித்த, திமுக இன்றைக்கு உதயநிதி கையில் போயிருக்கிறது. எடப்பாடி ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கஞ்சா விற்பனை இதுபோன்ற ஏதாவது நடந்திருக்கிறதா? ஆனால், இன்றைக்கு திமுக ஆட்சியில் பாலியல் பலாதாரம், கூட்டு பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை கஞ்சா விற்பனை என எங்கு பார்த்தாலும் அதிகரித்து காணப்படுகிறது.
கலர் கலராக வண்ணம் தீட்டிய ரயில்கள் இயக்கி மக்களிடம் பணத்தை சுரண்டும் அரசாக உள்ளது 2000 ரூபாயில் சென்னை சென்ற நிலை மாறி இன்றைக்கு 5000 ரூபாய் பணம் கொடுத்து சென்னை செல்ல வேண்டிய நிலை உள்ளது. மக்களை சுரண்டுகின்ற, கொள்ளையடிக்கின்ற ஒரு அரசாக மத்திய அரசு செயல்படுகிறது. அதை கண்டிக்க வேண்டிய மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது.
திமுகவின் 40 மாத ஆட்சி காலத்தில் என்ன சாதனை நடந்திருக்கிறது? 30 ஆயிரம் கோடி பணத்தை கொள்ளையடித்து எங்கே வைக்க வேண்டும் என தெரியாமல் இருக்கிறார்கள் என மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். அவர் பேசியதற்கான ஆடியோ டேப் செய்யப்பட்ட ஆதாரம் உள்ளது. இவர்கள் கொள்ளையடித்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடுகள் செய்துள்ளார்கள்.
எடப்பாடி ஆட்சி பிடித்தால் இவர்கள் அனைவரும் சிறைச்சாலை தான் செல்வார்கள். தங்கம் தென்னரசு, பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரின் வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்படும். ஏனென்றால் அவர்கள் தலைமீது கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. வைத்திலிங்கம் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தபோது ஒரே கோப்பில் 29 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார் என தமிழக அரசு வழக்கு தொடுத்திருக்கிறது.
எஸ்.பி.வேலுமணியை வைத்து நீங்கள் மிரட்ட பார்த்தால், அதை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களுக்கும் மேலாக அதிமுக வெற்றி அடையும், எடப்பாடி முதல்வராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வியுற்றார். தேனியில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தோல்வியுற்றார். இவர்கள் இருவருமே ஒன்றும் இல்லை. ஜாதி மதம் எல்லாம் அதிமுகவில் இல்லை. பொதுக்குழுவில் இவர்களை நீக்கிவிட்டதாக எடப்பாடி சொல்லி வருகிறார். பத்து அமாவாசை பொறுத்துக் கொள்ளுங்கள், பத்து அமாவாசை முடிந்த பிறகு மதுரை மீனாட்சி அருள் ஆசியுடன் மீண்டும் எடப்பாடி ஆட்சி அமைப்பார்” என்றார்.
What's Your Reaction?